ஒரு பாடலின் வெற்றி என்பது அதன் இசை தீர்மானிக்கும் என்றாலும் அதன் உயிர் நாடியாக இருப்பது பாடல் வரிகளே என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. அந்த வகையில் பல கவிஞர்களைக் கண்ட தமிழ் சினிமாவுக்குள் ஒரு நிபுணனாக புது வித ரசனையோடு தனக்கென ஒரு தனி முத்திரையோடு அடி எடுத்து வைத்தவர் மதன் கார்க்கி. கவிப்பேரரசு வைரமுத்துவின் மூத்த மகன் மற்றும் கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட  திறமையாளனாக விளங்கும் மதன் கார்க்கி 44வது பிறந்தநாள் இன்று. 




வைரமுத்துவின் வாரிசு என்பதை மட்டுமே அடையாளமாக கொண்டு திரைத்துறையில் நுழையாமல் கல்வியை தனது அஸ்திவாரமாக கொண்டு முதல் படமான 'எந்திரன்' படத்தின் மூலம் தனது புலமையை பெருமையுடன் நிரூபித்து இன்று வரை ஜெயித்து வருகிறார். இதுவரையில் இல்லாத அளவுக்கு கார்க்கியின் பாடல் வரிகளில் இருக்கும் தனித்துவம் என்பது கதைமாந்தர்களை வைத்து வரிகளை தேடுவதே. 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ...', 'பூம் பூம் ரோபோடா..' என முதல் படத்திலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை வெகு சிறப்பாக பயன்படுத்தி தனிப்பெரும் சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் அமைத்தார்.  


நவீன சிந்தனை, தனித்துமான வரிகள் மூலம் கவனம் ஈர்த்த மதன் கார்க்கியின் வரிகள் தான் 2கே கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலம். தமிழ் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தாமல் பிற மொழிகளின் மீது அவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தும் வகையில் பல பிறமொழி வார்த்தைகளையும் பயன்படுத்தி தன்னுடைய புலமையை வெளிப்படுத்தினார். 



கோ படத்தில் 'ஏனோ குவியமில்லாத காட்சிப்பேழை...', துப்பாக்கி படத்தில் 'கூகுள் கூகுள்...',  'வணக்கம் சென்னை' படத்தில் ஒசக்கா..., கத்தி படத்தில் 'செஃல்பி புள்ள..., ஐ படத்தில் ' பூக்களே சற்று ஓய்வு எடுங்கள்...' உள்ளிட்ட ஏராளமான பாடல்களில் வார்த்தைகளால் ஜாலம் செய்து இருந்தார்.  


நண்பன் படத்தில் 'அஸ்க லஸ்கா' என்ற பாடலில் 16 மொழி வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். ஐ படத்தில் இடம்பெற்ற 'லேடியோ லேடியோ...' பாடலில் நான் அன்றாடம் மிகவும் சாதாரணமாக நடைமுறையில் பயன்படுத்தும் சிப்ஸ், ஐஸ்கீரிம், காபி போன்ற பொருட்களின் தமிழ் பெயர்களான உருளை சீவல், பனிக்கூழ், குளம்பி என பயன்படுத்தி அமர்க்களப்படுத்தி இருந்தார் மதன் கார்க்கி. ஏ.ஆர். ரஹ்மானை எப்படி கம்ப்யூட்டர் இசையமைப்பாளர் என ஆரம்ப காலகட்டத்தில் அடியாளப்படுத்தினார்களோ அதை போலவே இன்றைய காலகட்டத்திற்கு ஏற்பே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாடல்வரிகளை எழுதுகிறார் என மதன் கார்க்கி விமர்சிக்கப்பட்டார். 


பாடல் வரிகளில் புதுமைகளை புகுத்தி தனக்கென ஒரு தனி பாதையில் பயணித்து புதுமையின் முன்னோடியாக விளங்கும் மதன் கார்க்கிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.