நா.முத்துக்குமார் இப்படி தான் பாடல்களை எழுதுவார் என அவரது பழைய நினைவுகளை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பகிர்ந்து கொண்டார்.
நா. முத்துக்குமாரின் பிறந்த நாளை ஒட்டி திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும், எழுத்தாளர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கொள்வதுடன், முத்துகுமாரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, முத்துக்குமார் உடனான நனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் பாடல்கள் மூலம் பிரபலமான கார்த்திக் நேத்தா, நா. முத்துக்குமாருடன் நெருங்கி பழகியவர். ஒருமுறை மேடையில் பேசிய கார்த்திக் நேத்தா, தான் சாகும் வரை தனது பேனாவுக்குள் நா. முத்துக்குமாரின் ஆன்மா இருக்கும் என உணர்வுப்பூர்வமாக பேசி இருப்பார். சினிமாவில் 20 ஆண்டுகளாக இருந்த போதிலும் முத்துக்குமாரை போல் ஒருவரை சந்தித்ததில்லை என்ற கார்த்திக் மேத்தா, நா. முத்துக்குமாரின் தம்பி என்ற இடத்தில் தான் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
எஃப்.எம். நிகழ்ச்சி ஒன்றிற்கு சீமான் மற்றும் நா. முத்துக்குமாருடன் காரில் சென்ற மகிழ்ச்சி தருணங்களை நினைவு கூர்ந்த நேத்தா, நா.முத்துக்குமார் குறித்த சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் தனியாக அமர்ந்து பாடல் எழுதுவது தான் முத்துக்குமாரின் வழக்கம் என்றும், பிற்காலத்தில் அவருக்கு பாடல் எழுத நேரம் இல்லாததால் இயக்குநர்களிடம் பேனா, பேப்பரை கொடுத்து பாடல் வரிகளை சொல்ல ஆரம்பித்து விடுவார் என்றும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
ஒரே இடத்தில் அமர்ந்து பாடல் எழுதுவதை விரும்பாத நா. முத்துக்குமார் சென்னை - திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டே டியூன் போட சொல்லி அதற்கு ஏற்றார்போல் பாடல் வரிகளை எழுதி விடுவார் என்றார். கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு இந்த அதீத திறமை நா.முத்துக்குமாரிடம் இருந்ததாகவும் குறிப்பிட்டார். நா. முத்துக்குமார் இல்லை என்றாலும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் பாடலாசிரியர் கார்த்திக் மேத்தா குறிப்பிட்டுள்ளார். முத்துக்குமார் இல்லை என்றாலும் அவரது நினைவாக அவரிடம் தான் கற்று கொண்டது பல இருப்பதாகவும் கார்த்திக் நேத்தா தெரிவித்துள்ளார்.