சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்ட தனது மகள் தூரிகை குறித்து கவிஞர் கபிலன் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர் விக்ரம் நடித்த தில் படத்தில் இடம் பெற்ற ‘உன் சமையலறையில்’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கபிலன். தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி என தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதி முன்னணி பாடலாசிரியராக இருந்தார். தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

பீயிங் வுமன் (Being Women Magazine ) எனும் இணைய இதழை நடத்தி வந்த தூரிகை,  ஆல்பங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். மேலும் சின்னத்திரை சீரியல்களுக்கு உடை அலங்காரமும் செய்து வந்து அவர், தூரிகை டாட்.காம் எனும் இணைய தளத்தில் பிரபலங்களை பேட்டி எடுத்து பதிவிட்டும் வந்துள்ளார். தூரிகையின் தற்கொலை சம்பவம் திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

திருமணம் செய்து கொள்ள கூறி பெற்றோர்கள் வற்புறுத்தியதால்  தூரிகை இத்தகைய முடிவை எடுத்ததாக கூறப்படும் நிலையில், தனது மகளின் பிரிவு குறித்து கபிலன் வார இதழ் ஒன்றில் உருக்கமாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில், 

எல்லா தூக்க மாத்திரைகளையும்
அவளே போட்டுக்கொண்டால்
நான் எப்படி தூங்குவது
 
எங்கே போனாள்
என்று தெரியவில்லை
அவள் காலணி மட்டும்
என் வாசலில்
 
மின் விசிறி
காற்று வாங்கவா
உயிரை வாங்கவா
 
அவள் கொடுத்த தேனீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்?
 
 
அவளுக்கு
கடவுள் நம்பிக்கை
இருக்கா இல்லையா
எனக்குத் தெரியாது
அவளே என் கடவுள்
 
குழந்தையாக அவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது.கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமா கண்களின் வலி
 
யாரிடம் பேசுவது எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்
 
கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பி இருக்கஇருந்தாலும் இருக்கிறதுஇருட்டு
 
பகுத்தறிவாளன்
ஒரு கடவுளை
புதைத்துவிட்டான்
 
என அந்த கவிதையில் கபிலன் தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.