பொன்னியின் செல்வன் வாய்ப்புக்காக தனிஒருவன் படத்தை தள்ளி வைத்ததாக நடிகர் ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
“பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக வெளியான ‘பொன்னி நதி’ மற்றும் ‘சோழா சோழா’ பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருடன் தமிழ் சினிமாவை சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி, பிரபலங்களின் பேச்சு, இறுதியாக ட்ரெய்லர் என நிகழ்ச்சி முழுவதுமே கொண்டாட்டமாக இருந்தது. படப் பிரோமோஷனின் அடுத்தக்கட்டமாக சென்னையில் ஊடகத்தினருடன் உரையாடிய பொன்னியின் செல்வன் படக்குழு, இன்று கேரளா சென்றிருக்கிறது. அங்கு ஊடகத்தை சந்தித்த படக்குழு படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறது.
அப்போது பேசிய ஜெயம் ரவி, “ என்னுடைய சிறுவயதில், ‘பொன்னியின் செல்வன்’ கல்கியில் வந்த போது அதை வாங்குவதற்காக பல மைல்கள் சைக்கிள் ஓட்டிச்சென்று அதை வாங்கினேன். ஆனால் இன்று பொன்னியின் செல்வனின் முதன்மை கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.
இது எனக்கு எமோஷனால தருணம். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு 6 மாதத்திற்கு முன்னதாகவே கதாபாத்திரத்திற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டேன். இந்தப்படத்திற்காக குதிரை ஓட்டம், யானை சவாரி, வாள் சண்டை என பல பயிற்சிகளை மேற்கொண்டேன். நானும் என் அண்ணனும் தனி ஒருவன் 2 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தோம். அந்த சமயத்தில்தான் இந்த ஆஃபர் வந்தது. பொன்னியின் செல்வன் வாய்ப்பு என்பது வாழ்நாள் வாய்ப்பு என்பதால் நாங்கள் அந்தப்படத்தை தள்ளிவைக்க முடிவு செய்தோம்.” என்று பேசினார்.