மலையாள திரையுலகில் அசைக்க முடியாத ஒரு வெற்றியை பெற்ற ஒரு திரைப்படம் 'லூசிஃபர்'. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மாலிவூட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், சானியா ஐயப்பன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் அமோகமான வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் இப்படத்தின் அதிகாரபூர்வமான போஸ்டர் ஒன்றை தற்போது வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.
ராஜநடை போட்டு வருகிறார் 'எம்புரான்' :
'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் நடிகர் பிருத்விராஜ் இயக்க, படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் முரளி கோபி. இந்த இரண்டாம் பாகத்திற்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் லால் நடிக்க படத்தின் இயக்குனர் பிருத்விராஜூம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது இந்த கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட் திரைப்படமான 'எம்புரான்'. இப்படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். முதல் பாகம் அமோகமான வெற்றியை பெற்றதால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. எம்புரான் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர் இப்படம் 2024ல் வெளியாகும் என்பதையும் அதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். 2023ம் ஆண்டு மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட லூசிஃபர்:
'லூசிஃபர்' திரைப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இந்த ஆண்டு தான் வெளியானது. இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய இந்த ரீமேக் திரைப்படத்தின் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருந்தார். மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவும் நடித்திருந்தார். இந்த தெலுங்கு ரீமேக் திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனரின் ஃபேவரட் ஹீரோ :
முதல் பாகமான 'லூசிஃபர்' படத்தை மோகன்லால் ரசிகர்கள் கொண்டாடினர். மோகன்லால் ரசிகரான இயக்குனர் பிரித்விராஜ் தன் ஃபேவரட் ஹீரோவை இயக்க வாய்ப்பு கிடைத்ததும் அவரை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாரோ அப்படி எல்லாம் செதுக்கி இருந்தார். அதே போல் இந்த இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்திலும் ஏராளமான அதிசயம் ஆச்சரியத்தை நான் எதிர்பார்க்கலாம்.