ஸ்ரீ கெளரி பிரியா
அமேசான் பிரைமில் வெளியான மாடர்ன் லவ் ஆந்தலாஜியில் ராஜூ முருகன் இயக்கிய லாலாகுண்டா பொம்மைகள் கதை மூலம் தமிழுக்கு அறிமுகமானார் ஸ்ரீ கெளரி பிரியா. கன்னடத்தில் இவர் நடித்த மேட் மற்றும் மெயில் ஆகிய இரு படங்களும் நல்ல வெற்றிபெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மணிகண்டன் நடித்த லவ்வர் படத்தில் நாயகியாக நடித்தார். எளிமையான நடிப்பும் அழகும் கொண்ட கெளரி பிரியா இயல்பாகவே ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இப்படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளிலும் நடித்து நல்ல கதைகளில் தான் எப்படியான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயங்கப் போவதில்லை என்று பதியவைத்துவிட்டார்.
செட்டில் அழுத கெளரி பிரியா
லவ்வர் படத்தில் நடிப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பாக தன் அம்மாவை இழந்தார் கெளரி பிரியா. தனது அம்மாவின் மூன்றாவது மாதம் நினைவு தினத்தை எண்ணி லவ்வர் பட படப்பிடிப்பில் அவர் அழுதுவிட்டதாக நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்திலும் அவ்வப்போது தனது அம்மாவுடனான புகைப்படங்களை பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்து வருகிறார்.
லவ்வர் படத்திற்கு பின் இவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஃபாலோவர்ஸின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அடுத்தடுத்த படங்களில் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளர்ந்து வரும் நடிகை கெளரி பிரியா பலவிதமான ஆடைகளை அணிந்து ஃபோட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற மாடர்ன் உடையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.