தனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருந்ததாகவும், மிகவும் சிரமப்பட்டு அதிலிருந்து வெளியே வந்ததாகவும் நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில் தான் இருந்துள்ளதாகவும், அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள நிறைய போராடியதாகவும் நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார்.


மணிகண்டன்


விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன், ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. விக்ரம் வேதா திரைப்படத்துக்கு டயலாக் ரைட்டராகவும் பணியாற்றியுள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன், நடிகராக ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 


ஆர் ஜே, டப்பிங் பேசுவது, திரைக்கதை எழுதுவது, இயக்குநர் என பல தளங்களில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். குட் நைட் படத்தின் வெற்றி மணிகண்டனை ஒரு சிறந்த நடிகராக ஆடையாளம் காட்டியது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்துள்ள படம் லவ்வர். லிவின் என்கிற வெப் சீரிஸை இயக்கிய பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 9ஆம் தேதி லவ்வர் படம் திரைக்கு வருகிறது.

லவ்வர் படத்தின் ப்ரோமொஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் மணிகண்டன் தன்னைப் பற்றியும், தனது சினிமா பயணம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசி வருகிறார். நேர்க்காணல் ஒன்றில் சினிமாவில் நடிகனாகவதற்கு முன்பு தான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி அவர் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.


தாழ்வுமனப்பாண்மையின் உச்சத்தில் இருந்திருக்கிறேன்


 நடிகனாகவதற்கு முன்பு தான் தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில் இருந்ததாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். அதில் இருந்து வெளியே வர ஒரு சில எழுத்தாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் ஆலோசனை கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு முகம் இருக்கும் என்றால் அது தன்னுடைய முகமாக தான் இருக்கும் என்று அவர் கூறினார். செல்ஃப் லவ் என்று ஒன்று இருப்பதையே தான் மிகதாமதமாக தான் கண்டுபிடித்ததாக மணிகண்டன் தெரிவித்தார்.


மேலும் “நம்முடைய லட்சியத்தை அடையும்வரை நம்மைச் சுற்றி இருப்பவர்கள், ஏன், நம் குடும்பத்தினர் கூட நம்மை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குவார்கள்” என்று மணிகண்டன் கூறியுள்ளது பலர் தங்களது வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக் கொள்ளும் ஒரு வாக்கியமாக அமைந்துள்ளது. இதை எல்லாம் கடந்து தான் நிச்சயம் இந்த இடத்திற்கு வருவேன் என்று தனக்கு நம்பிக்கை இருந்ததாக அவர் பேசினார்.


 காமெடி கதையில் மணிகண்டன்


 லவ்வர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார் மணிகண்டன் . ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் இந்தப் படத்தை வினோத்குமார் தயாரிக்கிறார். படத்தின் வசனத்தை பிரசன்னா பாலசந்திரன் எழுதியுள்ளார். படத்திற்கு சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, வைசாக் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணியில் கண்ணன் இணைந்துள்ளார். படத்தில் மணிகண்டனுடன் இணைந்து சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், தனம், பிரசன்னா பால்சாந்திரன், ஜென்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.