தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவார் அணிக்கு பெயர் மற்றும் சின்னம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்தாண்டு, மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர்.


சரத் பவார் கட்சிக்கு புது பெயர்:


மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், சமீபத்தில்தான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவாருக்கும் அவரின் அண்ணன் மகனுமான அஜித் பவாருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. 


தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் தொடர் பிரச்சனை நிலவி வந்த நிலையில், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்றது. இந்த நிலையில், அஜித் பவாரின் கட்சியை உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சி மட்டுமல்லாமல் கட்சியின் சின்னமும் அஜித் பவார் பிரிவினருக்கே சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்சி கைமாறிய நிலையில் மூத்த தலைவர் சரத் பவார் இன்று தனது அணியின் பெயர் மற்றும் சின்னம் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அறிவிக்கப்படும் புது அணியின் பெயரில் தேசியவாதம் மற்றும் காங்கிரஸ் ஆகிய சொல் இருக்கும் என்றும் சக்கரம், டிராக்டர் ஆகியவை கொண்டு அணியின் சின்னம் இருக்கும் என்றும் தகவல் வெளியானது.


இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சரத் பவார் அணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் புதிய அணியின் சார்பில் சரத் பவார் தனது பலத்தை நிரூபிக்க உள்ளார். 


யார் இந்த சரத் பவார்?


இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் சரத் பவாரும் முக்கியமானவர். இவர்1958ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியலில்  உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டவர்.


காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரிவுகளின்போது சரத் பவார் என்கிற பெயரும் அடிபட்டுக்கொண்டே  இருந்தது. இவர் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 4 முறை பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மத்திய பாதுகாப்புத் துறை, வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.


இத்தாலியில் பிறந்த காரணத்தால் சோனியா காந்தியை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களில் சரத் பவாரும் ஒருவர். இதனால் கட்சியில் இருந்து  நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டதை தொடர்ந்து, மற்ற தலைவர்களுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு மே மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.


காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் நீண்ட காலம் தனிக்கட்சியை தக்க வைத்துக் கொண்டவர்களில் சரத் பவார் குறிப்பிடத்தக்கவர். இருப்பினும், தேசிய அரசியலின் சூழல் காரணமாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து, காங்கிரஸ் கட்சிக்கு  நட்பு சக்தியாகவும் இருந்து வருகிறார்.