10 நாள் ஷூட்  ஓட Love Today ட்ராப் ஆகியிருக்கும் என அப்படத்தின் இயக்குநர் பாலசேகரன் அளித்த ஃப்ளாஷ்பேக் பேட்டி இப்போது கவனம் பெற்றுள்ளது.


லவ் டுடே திரைப்படம் 1997-ல் இயக்குநர் பாலசேகரனால் இயக்கப்பட்டு 100 நாட்கள் வெற்றிகரமாக திரையில் ஓடியது. இத்திரைப்படத்தில் விஜய், சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் மற்றும் தேவயானி நடிப்பில் சுஸ்வாகதம் என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. வித்தியாசமான கிளைமாக்ஸ் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் அளித்த பழைய பேட்டி ஒன்று சுவாரஸ்யமானதாக உள்ளது.
அந்தப் பேட்டியில் இருந்து:




லவ் டுடே படம் ஆரம்பித்து 10 நாள் ஷூட்டிங் தான் போயிருக்கும். அதற்குள் தயாரிப்பாளர் சவுத்ரி சார் மனசை யாரோ சிலர் கலைத்தனர். இதனால் படம் நிற்கும் நிலை வந்தது. அப்போது சவுத்ரி சார் என்னைக் கூப்பிட்டு படத்தை எடுத்தவரை போட்டுக்காட்டச் சொன்னார். நானும் காட்டினேன் அவருக்கு திருப்தி தான் இருந்தாலும் நான் இயக்குநராகிவிடக் கூடாது என்பதற்காகவே சிலர் முனைப்புடன் செயல்பட்டு சவுத்ரி சாரை குழப்பிக் கொண்டே இருந்தனர். அப்போது அவர், இந்தப் படத்தை விஜய் அப்பாவிடம் காண்பிப்போம் அவர் தான் உன்னை சிபாரிசு செய்தார் என்று கூறி அவரிடம் காண்பித்தார். அப்போது நான் திநகர் திருப்பதி கோயிலில் அமர்ந்து வேண்டிக் கொண்டிருந்தேன். அவர் பார்த்துவிட்டு என்ன கதை சொன்னாரோ அதை அழகாக எடுத்துள்ளார் என்று கூறிச் சென்றார். அப்புறம் படத்தை எடுத்து முடித்தேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி வித்தியாசமாக இருந்ததால் அதை ஒரிசாவில் உள்ள கடற்கரையில் படமாக்குவோம் என்றார். விஜய்யும் சுவலெட்சுமியும் பேசும் க்ளைமாக்ஸ் காட்சி ஒடிசா கடற்கரை பின்னணியில் எடுக்கப்பட்டது. அங்கு அலைகள் மேலே தெறிக்க தெறிக்க இருவரும் உணர்வுப்பூர்வமாகப் பேசிக் கொள்வார்கள்.


படத்தை முதன்முதலில் சாந்தி தியேட்டரில் பார்த்தேன். கடைசிக் காட்சியில் வந்த திருப்பத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அப்போதும் கூட ஏவிஎம் ஆப்பரேட்டர் ஒருவர் சவுத்ரி சாரிடம் க்ளைமேக்ஸை மாற்றலாம் என்று ஓதினார். ஆனால் அவரோ, இந்த க்ளைமாக்ஸுக்காகத் தான் அவருக்கு இந்தப் படமே கொடுத்தேன். நார்மலான க்ளைமாக்ஸாக இருந்திருந்தால் படமே கொடுத்திருக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
தயாரிப்பாளர் நல்ல மாதிரியாக அமைந்துவிட்டால் படத்திற்கு இடையூறு இருக்காது. அது போல் படத்தின் கதை நன்றாக இருந்தால் நல்ல தயாரிப்பாளர், நல்ல நாயகன், நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லாம் ஒன்றாக அமையும். படமும் வெற்றி பெறும்.


இவ்வாறு தனது அனுபவத்தை இயக்குநர் பகிர்ந்து கொண்டார்.