2008 - 2013ம் ஆண்டு வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நெடுந்தொடர் பிரேக்கிங் பேட். அமெரிக்காவின் குற்றவியல் சார்ந்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அதிக அளவிலான பார்வையாளர்களை கொண்ட ஒரு நெடுந்தொடராக இருந்தது மட்டுமின்றி பல விருதுகளையும் தட்டிச்சென்றுள்ளது.
வரவேற்பை பெற்ற லொள்ளு சபா :
அதே போல தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றுமொரு தொடர் விஜய் தொலைக்காட்சியில் 2004 - 2007 வரை ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி. நடிகர் சந்தானம், ஜீவா, மனோகர், ஜாங்கிரி மதுமிதா, பாலாஜி மற்றும் பல நடிகர்கள் நடித்த இந்த தொடர் பார்வையாளர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது.
இந்த இரண்டு பிரபலமான தொடர்களும் தற்போது ஒளிபரப்பாகாமல் இருப்பது அதன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் இந்த இரு தொடர்களின் தீவிர ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது அதை மீண்டும் ரீ-ரிட்டர்ன் செய்து ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது.
மீண்டும் ஓடிடியில் :
லொள்ளு சபா நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ள அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சோசியல் மீடியா மூலம் வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 20ம் தேதி முதல் ஓடிடியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நகைச்சுவை நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் லொள்ளு சபா நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்கள். அந்த வகையில் ஜோக்கிங் பேட், டீம் லொள்ளு சபாவின் பிரேக்கிங் பேட் பற்றிய ஸ்பூஃப் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சுவாமிநாதனின் "ஐயம் நாட் மேக்கிங் தி மொக்க ஜோக், ஐயம் தி மொக்க ஜோக்" எனும் இந்த வீடியோ ரசிகர்களை தெறிக்கச்செய்துள்ளது.
மரண கலாய் :
தொலைக்காட்சி தொடர்களையும், திரைப்படங்களையும் பங்கமாக கலாய்க்கும் ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி 156 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் கேலி செய்த படங்களின் பட்டியல் அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகும். அவர்களின் கேலியான பேச்சு பார்வையார்களின் கவலைகளை மறந்து சிரிக்க வைத்தது. அது தான் அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எத்தனை தொடர்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் வந்து போனாலும் இன்றும் நிலைக்கும் பெயர் லொள்ளு சபா.
கொரோனா காலகட்டத்திலும் பட்டையை கிளப்பியது:
அதற்கு உதாரணமாக கொரோனா காலகட்டத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கி போன சமயத்தில் மிகவும் இறுக்கமாக இருந்த அவர்களின் மனநிலையை சற்று லேசாக்க லொள்ளு சபா நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த சமயத்திலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது லொள்ளு சபா என்பது குறிப்படத்தக்கது.