Radhika Sarathkumar: விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தல்:
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன.
கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
ராதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்த கடைசி நாளாக இருக்கும் நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது. ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் இவர்களின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.
அதன்படி, ராதிகாவின் அசையும் சொத்து மதிப்பு 26.40 கோடி ரூபாயும், அசையா சொத்து மதிப்பு 27 கோடி ரூபாய் உள்ளது. ரூ.33 லட்சம், 750 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆபரணங்கள் உள்ளன. அதேபோல, இவருக்கு 14 கோடி ரூபாய் கடன் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சரத்குமாரின் சொத்து மதிப்புகளின் விவரங்களும் வெளியாகி உள்ளது. அதன்படி, சரத்குமாரின் அசையும் சொத்து மதிப்புகள் 8 கோடி ரூபாய், அசையா சொத்து மதிப்புகள் 21 கோடி ரூபாய் உள்ளன. சரத்குமாருக்கு உள்ள கடன் 14 கோடி ரூபாய் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயபிரபாகரனின் சொத்து மதிப்பு:
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். தற்போது, இவரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ள. அதாவது, விஜயபிரபாகரனுக்கு ரூ.17 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். ரூ.11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.6.57 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் என மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோபோல, தனது தாய் பிரேமலதாவுக்கு ரூ.6.49 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.48 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக தெரிவித்தார்.