லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகியது. ரஜினி ரசிகர்களை படம் திருப்தி படுத்தினாலும் மற்ற வெகுஜன ரசிகர்கள் படத்தை சமூக வலைதளத்தில் விமர்சித்து தள்ளினார்கள். பல்வேறு லாஜிக் ஓட்டைகளை சுட்டிகாட்டினார்கள். கூலி படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து படம் குறித்த விமர்சனங்களுக்கு முதல்முறையாக விளக்கமளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு படம் பண்ண முடியாது
" கூலி படத்தைப் பொறுத்தவரை நானாக எதுவும் சொல்லவில்லை. ரசிகர்களே அவரவர் ஒரு கதையை உருவாக்கினார்கள். உதாரணமாக இது சைன்ஸ் ஃபிக்ஷன் படம் என்று அவர்களே ஒரு கதையை உருவாக்கினார்கள். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தான் என்னை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது . என்னை மட்டுமில்லை இங்கு இருக்கும் எல்லா நடிகர்களையும் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களையும். ரசிகர்களின் உற்சாகம் இல்லையென்றால் நாங்கள் படம் பண்ண முடியாது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறை சொல்ல முடியாது. கூலி படத்தின் ரிலீஸூக்கு முன் நான் டிரெய்லர் கூட வெளியிடவில்லை. 18 மாதங்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்திருந்தேன் ஆனால் ரஜினி சார் படம் என்பதால் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது அதை எப்படி கட்டுப்படுத்துவது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நான் படம் எடுக்க முடியாது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் நான் நல்ல இயக்குநர். இல்லையென்றால் நான் முயற்சி செய்வேன்" என லோகேஷ் கூறியுள்ளார்
ஏ.ஐ மூலம் ரஜினியின் குரல்
கூடுதலாக கூலி படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினி நடித்தார். ஆனால் அவரது குரலை மட்டும் ஏ.ஐ மூலம் உருவாக்கியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். ஏ.ஐ துணையோடு பணியாற்றுவது மிக செளகரியமான அனுபவமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.