விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தெருநாய்கள் தொல்லை குறித்த விவாதம் சற்று மோதலை சந்தித்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள் பலரும் தெருநாய்களுக்கு ஆதரவாக பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற படவா கோபி பேசிய கருத்துக்கு சமூகவலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு படவா கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் படவா கோபி பேசியதாவது, "இரவு 9 மணிக்கு பிறகு புதிதாக வருபவரை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக நாய் குறைக்கும். எதற்கு இரவு 11 மணி அளவில் தெரியாத இடங்களுக்கு செல்கிறீர்கள் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், படவா கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மக்கள் பார்த்தது எடிட் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை இப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விஜய் டிவி நிர்வாகம் எடிட் செய்யப்படாத வீடியோவை ஒளிபரப்ப வேண்டும். மக்கள் யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். எனது பேச்சால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், மனம் புண்பட்டிருந்தால் தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.
மனிதர்கள் மீதான அன்பிலும், நாய்கள் மீதான அன்பிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால், நான் நினைத்தது வேறு, அங்கு நடந்தது வேறு. நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து எனக்கு தெரியாது என அவர் தெரிவித்தார்.