லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழியில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 900 திரையரங்குகளில் வெளியாகியது. இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் லியோ படத்திற்காக திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. விஜய் , த்ரிஷா, அர்ஜூன் , சஞ்சய் தத் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ்
லியோ படம் வெளியாவதற்கு முன்னதாக தமிழ் யூடியூப் சானல்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் லோகேஷ். தமிழகத்தைத் தவித்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் படத்தின் ப்ரோமோஷன்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்றாலும், படம் தொடர்பான வேலைகள் கடைசி நேரம் வரை இழுத்து வந்த காரணத்தினால் பிற நாடுகள் மற்றும் மாநிலங்களில் ப்ரோமோஷன்களுக்கு செல்ல முடியாமல் போனது.
கூட்ட நெரிசலில் காயம்
இந்நிலையில், படத்தின் ரிலீஸூக்குப் பின் லியோ படத்துக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பைப் பார்த்து கேரள ரசிகர்களை சந்திக்கச் சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். முதல் கட்டமாக பாலக்காடு சென்ற லோகேஷ் அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் லோகேஷ் கனகராஜ் காயமடைந்துள்ளார். இதனால் அங்கிருந்து புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்த லோகேஷ் “ உங்களது அளவுகடந்த அன்பிற்கு நன்றி. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட சிறிய காயத்தினால் நான் செல்ல இருந்த இன்னும் இரண்டு இடங்களுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. நிச்சயமாக மறுபடியும் கேரளாவில் உங்களை சந்திப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில், லோகேஷுக்கு ஆறுதல் தெரிவித்தும் மீண்டும் கேரளா வர அழைப்பு விடுத்தும் ரசிகர்கள் கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.