தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி அசர வைத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த மாஸான 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில் தற்போது அவரின் தலைவர் 171வது படத்தின் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குநராக கொண்டாடப்பட்டு வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜயை வைத்து 'லியோ' திரைப்படத்தை இயக்கி வருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 


மாநகரம் :


2017ம் ஆண்டு 'மாநகரம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்த லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகத்தியே திரும்பி பார்க்க வைத்தார். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சுமார் 4 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் 11  கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. 


கைதி :


2019ம் ஆண்டு அதிரடி திரில்லர் ஜானரில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  வெளியான 'கைதி' திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக திரையரங்கம் எங்கும் ஹவுஸ்புல் காட்சிகளால் நிரம்பி வழிந்தன. உலகெங்கிலும் வெளியான இப்படம் 105 கோடி வரை வசூலித்ததாக தகவல் கூறுகின்றன.


மாஸ்டர்  :


கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு 2021ம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் நடிப்பில் ஆரவாரத்துடன் வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'. திரையரங்குகளில் அலைமோதிய ரசிகர்கள் கூட்டம் மாஸ்டர் திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் இதுவரையில் எந்த ஒரு திரைப்படத்திற்கும் கிடைக்காத அளவுக்கு 90% திரையரங்குகளில் வெளியாகி கெத்து காண்பித்து சுமார் 230 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என கூறப்படுகிறது.


விக்ரம் :


உலகநாயகன் கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக கூட்டணி சேர்ந்த 'விக்ரம்' திரைப்படம் 2022ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்டது. விமர்சன ரீதியாக தூள் கிளப்பிய விக்ரம் திரைப்படம் வசூலில் அதற்கு முன்னர் இருந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 200 கோடியை நெருங்கி உலகளவில் 430 கோடி வரை வசூல் செய்து இமாலய சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.  


தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'லியோ' திரைப்படம் அவரின் முந்தைய திரைப்படங்களின் வசூலை எல்லாம் முறியடித்து ஏகோபித்த வரவேற்பை பெற்று தூள் கிளப்பும் என மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரின் ரசிகர்கள். 


அடுத்தாக லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணி இணைய போகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் சரவெடி கொண்டாட்டத்துடன் களைகட்டியுள்ளது.