விக்ரம் :
நடிகர்கள் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரது நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வசூல் சாதனையில் விக்ரம் !
வசூலிலும் பல சாதனைகளை படைத்துவரும் ‘விக்ரம்’ முதல் வாரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெற்றிகரமாக ஓடி 140.30 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வசூலின் மூலம் முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் விக்ரம் 2 ஆம் இடத்தை பிடித்ததோடு விஜய் நடித்த பிகில் படத்தின் முதல்வார வசூலையும் முறியடித்து இருக்கிறது. முதலிடத்தில் ரஜினியின் 2.0 படம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி விக்ரம் திரைப்படம் உலக அளவில் தோராயமாக 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மட்டும் முதல்வாரத்தில் விக்ரம் திரைப்படம் 98 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தியேட்டர் உரிமையாளரை எச்சரித்த லோகேஷ்:
விக்ரம் படத்தில் கமல்ஹாசன் தியேட்டரின் ஒரு ரகசிய பாதையில் இருந்து வெளியே வருவது போல காட்சி ஒன்றை அமைத்திருப்பார் லோகேஷ். அந்த காட்சி சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல வெற்றி தியேட்டரில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காட்சியை வெளியில் செட் அமைத்து எடுக்கலாம் என முடிவு செய்த இயக்குநர் லோகேஷ் தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கௌதமனிடம் கதையின் அந்த காட்சியமைப்பை விளக்கி அப்படியான ஒரு இடம் வேண்டும் என கேட்டிருக்கிறார். அதற்கு திரையரங்கின் உள்ளேயே அந்த செட்டப் இருக்கிறதே என ராகேஷ் கௌதம் கூற , அந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.
என்னதான் அது செட்டாக இருந்தாலும் , உண்மையிலேயே இந்த தியேட்டரில் அப்படியான செட்டப் இருக்கிறதா என ரசிகர்கள் ஆராய முயற்சித்து பார்ப்பார்கள் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள், பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என எச்சரித்தாராம் லோகேஷ் . இதனை ராகேஷ் கௌதமன் கூறியிருக்கிறார். மேலும் விக்ரம் படத்தால் தங்கள் திரையரங்கு கூடுதலாக பிரபலமடைந்திருக்கிறது என்றார்.