மக்களவை தேர்தலில் பாமக வேட்பாளராக கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான் களமிறங்கவுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை தொடர்ந்து பாமக தான் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 10 தொகுதிகளைப் பெற்றுள்ள நிலையில் இன்னும் ஒரு தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இதனிடையே பாமகவின் கடலூர் தொகுதியில் வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார். இது திரைத்துறையினருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தமிழ் சினிமாவில் தங்கர் பச்சான் ஒரு தவிர்க்க முடியாத இயக்குநர். நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார்.
வட மாவட்ட கதைக்களம்
கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டிக்கு அருகிலுள்ள பத்திரக்கோட்டை என்ற கிராமத்தில் தான் தங்கர் பச்சான் பிறந்தார். ஒளிப்பதிவாளராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய அவர், அழகி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், அம்மாவின் கைபேசி, களவாடிய பொழுதுகள், கருமேகங்கள் கலைகின்றன என பல படங்களை இயக்கியுள்ளார்.
தங்கர் பச்சான் மண் சார்ந்த படங்களை எடுப்பதில் சிறந்தவர். தமிழ் சினிமாவில் சரியாக சித்தரிக்கப்படாத வட மாவட்ட கிராமங்களையும், அதன் மனிதர்களையும் அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைத்திருப்பார். இவருடைய படங்களின் கதைக்களம் பெரும்பாலும் பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தான் எடுக்கப்பட்டிருக்கும். சிறு கதைகள்,நாவல்கள் என எழுத்தாளராகவும் அவரது பயணம் நீண்டது.
மக்களவையில் ஒலிக்குமா மக்கள் இயக்குனர் தங்கர்பச்சான் குரல்?
விவசாய குடும்பத்தில் 9வது பிள்ளையாக பிறந்த தங்கர் பச்சான் தந்தை கடலூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரம் பற்றி நன்கு அறிந்தவர். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சினை என்ன என்பதையும் புரிந்தவர். இதனால் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அவரது குரல் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைக்காக ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கர் பச்சான் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே பாமகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் தங்கர்பச்சான், சீமான் உள்ளிட்டோர் தொங்கிய அமைப்பில் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றியுள்ளார். தங்கர் பச்சான் களம் காண்பதால் கடலூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.