நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையே 4 முனை போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியை தவிர, திமுக, அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்களது சின்னங்களில் வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், கடந்த சில தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, சின்னம் கிடைக்காமல் போய்விட்டது. நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதீய மக்கள் ஐக்கிய கட்சிக்கு சமீபகாலத்திற்கு முன்பு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சியானது தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியது. பாரதீய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், வேறு சின்னம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சீமானின் சின்னம் என்ன..?
இந்தநிலையில், சீமானின் சின்னம் என்ன, நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன என்ற கேள்வியை முன்வைத்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியில் போஸ்டர் ஒட்டியும் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும், சின்னம் இல்லாமலே நாம் தமிழர் கட்சியினர் ஆங்காங்கே தங்களது கட்சிக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரமும் செய்து வந்தனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நாம் தமிழர் கட்சிக்கு ஆட்டோ, மைக், படகு என 3 சின்னங்கள் கொடுத்து, இதில் எது வேண்டுமென்று கேட்டதாகவும் அப்போது மைக் சின்னத்திற்கு ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.
40 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம்:
மக்களவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைக்கிறார். இதில், அனைவருக்கும் சம உரிமை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக 2021 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 2019 மக்களவை தேர்தலாக இருந்தாலும் சரி இதுவரை நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல், தனித்தே போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டபோதே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என தெரிவித்தது. அன்று முதல் இன்று வரை நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தலிலும் தனித்து மட்டுமே போட்டியிடுகிறது.