மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில்,  சினிமாவில் நடிக்க மாட்டேன் என தான் சொன்னதை நடிகை கங்கனா ரணாவத் செய்வாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இமாச்சல பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் பாஜக சார்பில் போட்டியாளராக களம் கண்டார். 






மண்டி தொகுதியில் சூறாவளியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட கங்கனா ரணாவத் வித்தியாசமான முறையில் பரப்புரை மேற்கொண்டார். பிரதமர் மோடியும் கங்கனாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இப்படியான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் பாஜகவின் கங்கனா ரணாவத் பின்னடைவை சந்தித்தார். ஆனால் அடுத்தடுத்த சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அவர் முன்னிலை வகிக்க தொடங்கினார். இறுதியாக கங்கனா 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வென்றார். அவர் 5 லட்சத்து 37 ஆயிரத்து 22 வாக்குகள் பெற்றார். 






பரப்புரையில் கங்கனா பேசிய பல கருத்துகள் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்தியாவின் சுதந்திரம் தொடங்கி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரை பேசி பலரின் கண்டனத்தைப் பெற்றார். இதற்கிடையில் தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில் விலகி விடுவதாக கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார்.. மேலும் திரையுலகம் என்பது பொய்யானது. அங்கு எல்லாமே போலியானது. பார்வையாளர்களை கவர அப்படி செய்கிறார்கள். கட்டாயத்தில் பெயரில் தான் சினிமாவில் நடித்து வருகிறேன். நடிப்பதில் சலிப்பு ஏற்படும் போது தான் கதை எழுத தொடங்கினேன் எனவும் தெரிவித்திருந்தார். 


சொன்னபடி மண்டி தொகுதியில் வென்று கங்கனா ரணாவத் எம்.பி, ஆக வெற்றி பெற்றுள்ளதால் அவர் நடிப்பில் இருந்து சொன்னபடி விலகுவாரா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். ஏற்கனவே கங்கனாவுக்கு நடிப்பு பெரிதாக கைகொடுக்கவில்லை என பலரும் தெரிவித்துள்ள நிலையில் மண்டி தொகுதி மக்கள் தான் அவர் நடிப்பை நிறுத்த காரணம் என நன்றி தெரிவித்தும் கிண்டலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.