மகாராஷ்ட்ராவில் போட்டியிட்ட நடிகை நவ்னீத் ரவி ராணா தோல்வியடைந்ததை பலரும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. காலை முதல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக 3வது முறையாக தொடர்ச்சியாக பாஜக வென்றாலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா  அல்லது பாஜக கூட்டணி கட்சிகள் இந்தியா கூட்டணியுடன் கைகோர்க்க உள்ளதா என பரபரப்பான சூழல் நிலவுகிறது. 






இப்படியான நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் அமராவதி தொகுதியில் கடந்த தேர்தலில் நடிகை நவ்னீத் ரவி ராணா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழில் நடிகர் கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி படத்திலும், விஜயகாந்த் நடித்த அரசாங்கம் படத்திலும் ஹீரோயினாக நடித்த அவரின் இந்த வெற்றி பெரும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. 


இதனிடையே சமீபத்தில் நவ்னீத் ரவி ராணா பாஜகவில் இணைந்தார். அவரை மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தியது. தீவிர பிரச்சாரம் செய்த நவ்னீத் சர்ச்சைக்குரிய வகையில் பல கருத்துகளை தெரிவித்தார். அதில் ஒரு நிகழ்வில், “ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல விரும்பாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்” என தெரிவித்தார். 


இதேபோல் ஹைதராபாத்தில் நடந்த பிரச்சாரத்தில் ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்களும், பிரதமர் மோடியின் சிங்கங்களும் உள்ளனர் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு  பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது. 


இதில் நவ்னீத் ரவி ராணா காங்கிரஸ் வேட்பாளரிடம் 19,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்த தோல்வியை அவரது ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக தேர்தலில் ஜெயிக்க வேண்டி கடந்த ஜூன் 1 ஆம் தேதி கோயிலில் சிறப்பு தரிசனம் எல்லாம் நவ்னீத் ரவி ராணா மேற்கொண்டார். அவரின் தோல்வியை பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.