மக்களவை தேர்தல் 2024
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், நாட்டில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்றும், கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்களித்துவரும் மலையாள திரைத்துறையினர்
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான அந்தந்த தொகுதிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். முன்னதாக நடிகர் ஃபகத் ஃபாசில் ஆலப்புழாவில் தன் தந்தை பாஸிலுடன் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் டொவினோ தாமஸ் , சுரேஷ் கோபி உள்ளிட்டவர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மலையாள முன்னணி நடிகையான பார்வதி திருவோத்து வாக்களிப்பது தொடர்பாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் “மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
தங்கலான்
பூ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியவர் நடிகை பார்வதி திருவோத்து. தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் , மரியான் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் . பார்வதி திருவோத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.