ரத்னம் பட விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். 


ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் “ரத்னம்”. ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ரத்னம் படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. 


இயக்குநர் ஹரியும், விஷாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களை சந்தித்து ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். தாமிரபரணி மற்றும் பூஜை படங்களை விஷாலை வைத்து இயக்கிய ஹரி, 3வது முறையாக ரத்னம் படத்தை இயக்கியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனிடையே நேற்றைய தினம் விஷால் பற்றிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில் தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் படத்தை ரிலீஸ் செய்வதில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுவதாக தெரிவித்தார். 


மேலும் இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்கே அவமானம் என்றும், முன்னாள் தயாரிப்பாளரின் மகன் என்ற முறையில் இதனை சொல்வதாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் ரத்னம் படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் முதல் காட்சி சிறப்பு காட்சியாக காலை 9 மணிக்கு திரையிடப்படும். ஆனால் ரத்னம் படம் சென்னையில் 10 மணிக்கு முதல் காட்சியும், பிற ஊர்களில் 11 மணிக்கு தான் திரையிடப்படவும் செய்யப்பட்டுள்ளது. 


இதற்கெல்லாம் சில நாட்கள் முன்பு நேர்காணல் ஒன்றில் விஷால் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட்  நிறுவனத்தை கடுமையாக விமர்சித்தது தான் என அவரது ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சில தினங்களில் நடிகர் விஷால் அவர்களின் 'ரத்னம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும்? அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா?


இதுபோன்ற நெருக்கடிகளால் தமிழ் சினிமா மெல்ல மெல்ல தன் இயல்பை இழந்து வருகிறது! இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இது தான்! தமிழ் சினிமாவிற்கும் இது தான்! அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும் தான் தமிழ் சினிமாவில் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர்” என கடுமையாக விமர்சித்து விஷாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.