சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக அதிகளவு கடத்தல் தங்கம் பிடிபட்டு வருகிறது. இதன் காரணமாக, விமான நிலையத்தில் பயணிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் தங்க நகைகள் கிடந்துள்ளது. 1250 கிராம் எடையுள்ள இந்த தங்க நகைகளின் மதிப்பு ரூபாய் 90 லட்சம் ஆகும்.
சென்னை விமான நிலைய கழிவறையில், குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த, ரூ.90 லட்சம் மதிப்புடைய ஒன்றே கால் கிலோ தங்க கட்டிகளை, விமான நிலைய தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்து, சுங்கத்துறையிடம் ஒப்படைப்பு.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகைப் பகுதியில் உள்ள கழிவறையை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தனர். அப்போது கழிவறையில் இருந்த குப்பைத் தொட்டி ஒன்றில், பார்சல் ஒன்று கிடந்ததை, ஒப்பந்த ஊழியர்கள் பார்த்து, உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து மேலாளர், சென்னை விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்சலை எடுத்துப் பார்த்துவிட்டு, அதில் வெடிகுண்டு ஏதாவது இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். வெடுகுண்டு சோதனைக்குப் பின்னர் அந்த பார்சலில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.
இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்துப் பார்த்தனர். அதனுள் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அந்த பார்சலை பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்கக் கட்டிகளை ஆய்வு செய்த பொழுது, அந்த 4 தங்கக்கட்டிகள் மொத்த எடை ஒரு கிலோ, 250 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 90 லட்சம் எனவும் கூறினர்.
இதை அடுத்து தங்க கட்டிகளை, பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள்,இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கக் கட்டிகளை கடத்தி வந்த மர்ம அசாமியார்? என்று விசாரணை நடக்கிறது. சென்னை விமான நிலையத்தில் வருகை பகுதியில் உள்ள, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த தங்க கட்டிகள் துபாயிலிருந்து இன்று அதிகாலை வந்த விமானத்தில், கடத்திக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். விமான நிலையத்தில் சுங்கச் சோதனை அதிகமாக இருந்ததால், கடத்தல் ஆசாமி, கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, அதன் பின்பு யார் மூலமாகவது அதை வெளியே எடுத்து வர, திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.