லாக் அப் ரியாலிட்டி ஷோவுக்கு 100 மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளதால் குதூகலத்தில் உள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.


பாலிவுட்டில் ஃபேஷன், வோ லம்ஹே, கேங்ஸ்டர் உள்ளிட்ட பல படங்கள் தொடங்கி இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் கங்கனா ரனாவத். அண்மையில் ஏ.எல்.விஜய் இயக்கி வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். 


சர்ச்சைகளின் நாயகி!
பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பேர் போன நடிகை கங்கனா ரனாவத். சுசாந்த் சிங் ராஜ்புத் இறப்பையொட்டி பாலிவுட்டின் வாரிசு அரசியல் மீது வைத்த விமர்சனம் தொடங்கி, சமீப காலமாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சைக்கு வித்திட்டு வருகின்றன. 1947 ஆம் ஆண்டு நாடு பெற்ற சுதந்திரம் வெறும் பிச்சை என்று விமர்சித்த கங்கனா, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான்கள் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்களை விமர்சித்தும், ஷாஷீன் பாகில் போராடிய ஒரு பெண்மணியை நூறு ரூபாய்க்கு வந்தவர் என்றும் விமர்சித்திருந்தார்.


தடைகளைத் தாண்டி வந்த ரியாலிட்டி ஷோ...
கங்கனா ரணாவத் முதல் முறையாக ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியை ஆன் ஏரில் கொண்டு வர படாதபாடு பட்டார் கங்கனா ரனாவத். 'லாக்அப்' என்ற அந்த நிகழ்ச்சிக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது ஐடியாவை திருடி 'லாக்அப்' ரியாலிட்டி ஷோ தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐதராபாத் நீதிமன்றம் 'லாக்அப்' நிகழ்ச்சியை தொடங்க இடைக்கால தடை விதித்தது. இதனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது.


இந்நிகழ்ச்சியை தயாரித்து வரும் பாலாஜி டெலிபிலிம் நிறுவனத்தின் ஏக்தா கபூர் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த ஹைதராபாத் நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாத இறுதியில் (பிப்ரவரி இறுதியில்) திட்டமிட்டபடி லாக்அப் நிகழ்ச்சி தொடங்கியது. 'லாக்அப்'பில் பங்கேற்க இருப்பவர்கள் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோரின் மேடை நிகழ்ச்சிகளுக்கான ஷூட்டிங் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாக்அப்பில் 16 போட்டியாளர்கள் அடைக்கப்பட்டனர்.




மகிழ்ச்சியில் கங்கனா..
இந்நிலையில் தனது முதல் ரியாலிட்டி ஷோவிற்கு 100 மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளது குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் கங்கனா ரனாவத். இது குறித்து அவர், "நிகழ்ச்சி தொடங்கி வெறும் 19 நாட்களில் 100 மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளது. இது லாக் அப் நிகழ்ச்சிக்கான அன்பு, ஆதரவு, பிடிப்பின் வெளிப்பாடும். இந்த நிகழ்ச்சியின் கருத்துரு புதுமையானதாக உள்ளது. மக்களை ரசிக்க வைப்பதாக உள்ளது என்பதும் நிரூபணமாகி உள்ளது. அதே போல் எக்தா கபூரின் புத்தாக்க சிந்தனைகள் என்றுமே பெஸ்ட் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எம்எக்ஸ் ப்ளேயர் மற்றும் எக்தா கபூர் இணைந்து ரசிகர்களின் நாடித் துடிப்பை சரியாக கணித்து ஹிட் அடித்துள்ளனர். லாக் அப் இன்னும் இன்னும் பெரிய வெற்றியைப் போகிறது" என்று கூறியுள்ளார்.