ஹோலி கொண்டாடிவிட்டு தனது காரில் ஆண் நண்பருடன் ஹைஸ்பீடில் பறந்த சீரியல் நடிகை விபத்தில் சிக்கி பலியானார். சாலையோரம் இருந்த செடிகளை பராமரிக்கும் பணியில் இருந்த ஊழியர் மீது கார் மோதியதால் அந்தப் பெண்ணும் விபத்தில் உயிரிழந்தார். நடிகையுடன் வந்த ஆண் நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கடந்த 18 ஆம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மார்ச் 17 ஆம் தேதி முதலே கொண்டாட்டங்கள் களைகட்டின.  இந்நிலையில் ஹோலிப் பண்டிகையான மார்ச் 18 அன்று ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரில் சின்னத்திரை நடிகை காயத்ரியும், அவரது நண்பர் ரோஹித்தும் பயணித்தனர். கச்சிபோலி பகுதியில் கார் வேகமாக வந்து கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி சுழன்றது. இதில் காரிலிருந்த காயத்ரி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடைய நண்பர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் சாலையோரம் இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்துக் கொண்டிருந்த மஹேஸ்வரம்மா (38) விபத்தில் சிக்கினார். அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்தச் சம்பவம் டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரியின் மறைவுக்கு தெலுங்கு சீரியல் நடிகர்கள், நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




முன்னதாக கடந்த 17 ஆம் தேதி ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியிலும் ஒரு விபத்து நடந்தது. அதிவேகமாக வந்த கார் தாறுமாறாக ஓடி, தெருவோரம் பலூர் விற்றுக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் இரண்டு மாத கைக்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. விசாரணையில் அந்த கார் டிஆர்எஸ் எம்எல்ஏ முகமது ஷகில் ஆமிரின் உறவினருடைய கார் என்பது தெரியவந்துள்ளது.


இதேபோல் மார்ச் 18 ஆம் தேதி நடந்த இன்னொரு விபத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் பலியாகினர். தெலுங்கானாவில் மகபூபா மாவட்டத்தின் கேசாமுத்ரம் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து குறித்து கேசாமுத்ரம் காவல் துணை ஆய்வாளர் சி.ரமேஷ் பாபு கூறுகையில், உப்பாராப்பல்லி கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சிதுருல்லா நரேஷ் சந்திரா, அவரது மனைவி லக்‌ஷ்மி, மகள் ஸ்ரவ்யா, வசந்தராவ் என நான்கு பேர் பயணித்தனர். எதிர் திசையில் புக்யா தருன் (25), நரசிம்மா (40) இன்னொரு வாகனத்தில் வந்தனர்.


இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் நரேஷ் சந்திரா, தருண், நரசிம்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
அடுத்தடுத்து இரண்டு நாட்களில் சாலை விபத்தில் 6 பேர் இறந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.