சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான  ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் மீது எதிர்மறையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படத்தில் தங்கள் சமுதாயம் தவறாக காண்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த காலண்டர் அட்டையில் இடம்பெற்றிருந்த அக்னி கலசம் படம் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக லட்சுமி படம் வைக்கப்பட்டது. 


ஆனாலும் பிரச்னை முடிந்த பாடில்லை. சூர்யா பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் 5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் பா.ம.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே படத்தில் எப்படி லட்சுமி படத்தை மாற்றுவீர்கள் என பாஜகவை சேர்ந்த ஹெச். ராஜா காட்டமாக பேசியிருந்தார். இது குறித்து சூர்யா அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்தபோதினும், சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சூர்யாவுக்கு ஆதரவாக திரைப்பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.. அரசியல் தலைவர்கள் நடிகர்களுக்கு அழுத்தம் கொடுப்பது முதன்முறையல்ல.. முன்னணி நடிகர்கள் பலர் இதே போன்ற அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர். 


அப்படி அழுத்தங்களை எதிர்கொண்ட நடிகர்கள் யார்? அவர்கள் சந்தித்த பிரச்னைகள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 


பாபா படத்தில் எழுந்த சர்ச்சை 


நடிகர் ரஜினி தனது படத்தில் புகைபிடிப்பதையும், மது குடிப்பதையும்  துணிச்சல் மிக்க நிகழ்வாக காண்பிக்கிறார் என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் ரஜினி மீது ஒரு குற்றசாட்டை வைத்தார். இந்தப் பிரச்னையில் பாமகவை சேர்ந்தவர்கள், பாபா பட வெளியீட்டின் போது சில திரையரங்குகளில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். திரையரங்கில் திரையும் கிழிக்கப்பட்டது.



 


கொந்தளித்த அஜித் 




முன்னாள் முதல்வர் கருணாநிதி பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அஜித் மேடையில் பேசிய போது,நடிகர்கள் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என பேசினார். அஜித் பேசிக் கொண்டிருக்கும் போதே ரஜினி எழுந்து கைத்தட்டினார். இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து அஜித் கருணாநிதியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க பிரச்னை முடிவுக்கு வந்தது. 


ஜெயலலிதா vs கமல் 




விஸ்வரூபம் படத்தை டிடிஹெச் சில் வெளியிடப்போவதாக கமல் அறிவித்தார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த முடிவை கைவிட்டு படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்தார். இதனிடையே படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி இஸ்லாமியர்கள் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசிடம் முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்ற  ஜெயலலிதா விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தார். இதனையடுத்து நீதிமன்றம் சென்றார் கமல். வழக்கை தனி நீதிபதி வெங்கட்ராமன் படத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டார். 


ஒரு விரல் புரட்சி.. 




விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில் ஒரு விரல் புரட்சியே பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலில் அரசு கொடுக்கும் இலவசங்களை தீயிட்டு கொளுத்துவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனை அப்போதைய அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, சி.வி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் கண்டித்தனர். அதிமுகவினர்  சர்கார் வெளியிடப்பட்ட திரையரங்குளில் தாக்குதல் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்தக் காட்சியை நீக்குவதாக படக்குழுவினர் உத்தரவாதம் அளித்த நிலையில் சர்ச்சை முடிவுக்கு வந்தது.