ஏ தில் ஹே முஷ்கில், குயீன் முதலியத் திரைப்படங்களில் நடித்தவர் லிசா ஹேய்டன். கிளாமர் மற்றும் ஃபிட்னஸுக்காக பிரபலமாக அறியப்படுபவர். ஜிம்னாஸ்டிக் மேல் ஆர்வம் கொண்ட லிசா நூதனமான முறையில் தலைகீழாக காருக்குள் நுழையும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
லிசா ஹேய்டன்
ஐஷா என்கிறத் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் லிசா. கங்கனா ரனாவத் நடித்த குயீன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் லிசா. இந்தக் கதாபாத்திரத்தில் தனது நடிப்பிற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார். தொடர்ந்து பாலிவுட்டில் வெளியான ஹவுஸ்ஃபுல் 3 மற்றும் கரண் ஜோஹர் இயக்கிய ஏ தி ஹே முஷ்கில் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். நடிப்பைத் தவிர்த்து சர்வதேச அளவில் மாடலாக இருந்து வருகிறார் லிசா.
தலைகீழாக காருக்குள் நுழைந்த லிசா
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லிசா வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். வழக்கமாக எந்த மனிதராக இருந்தாலும் காருக்குள் செல்ல வேண்டும் என்றால் கதவைத் திறந்து உள்ளே செல்வதுதானே வழக்கம். ஆனால் லிசா தனது காருக்குள் சற்று வித்தியாசமான முயற்சியில் நுழைந்திருக்கிறார். தலைகீழாக நின்று தனது உடலை மடக்கி காரின் ஜன்னல் வழியாக உள்ளே சென்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அவர்.
குவியும் பாராட்டுக்கள்
இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஏன் அவரைப் பாராட்ட வேண்டும் என்று பலருக்கு தோன்றலாம். லிசாவிற்கு தற்போது 37 வயதாகிறது மேலும் அவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இந்த வயதில் இப்படியான ஒரு ஸ்டண்ட் செய்வது பார்ப்பதற்கு மிக எளிதானதாக தெரிந்தாலும் முறையான பயிற்சி இன்று அதனை செய்ய முடியாது. அவரது ஃபிட்னஸ் பலரை ஊக்குவிக்கிறது என்கிற காரணத்தினால்தான் அவருக்கு இந்தப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.