அமலாக்கத்துறை என்றால் என்ன?


மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது அமலாக்கத்துறை இயக்குநரகம். பணமோசடி, அந்நியச் செலாவணி மீறல்கள் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆனால், இந்த அமைப்பின் மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரக தலைவராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசு நீட்டித்தது.


இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது, அதில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜூலை 31ஆம் தேதி வரையில், அந்த பதவியில் தொடர அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


அமலாக்கத்துறை தலைவருக்கான பதவிக்காலத்தை நீட்டித்த விவகாரம்:


அமலாக்கத்துறைக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மீறும் விதமாக எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்கால நீட்டிப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், "சட்டத்தை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைச் செய்வது அவசியம் என்று உயர் அதிகாரம் கொண்ட குழு முடிவு செய்தால் மட்டுமே நீட்டிப்பு வழங்க முடியும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி நியமிக்கும் ஒருவர் அடங்கிய குழுவால் மட்டுமே நீட்டிப்பு வழங்க முடியும்.


அமலாக்கத்துறை இயக்குநருக்கு வழங்கப்பட்ட நீட்டிப்பு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், மிஸ்ராவுக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது" என தெரிவித்தது.


வழக்கின் விவரம்:


எஸ்.கே.மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெயா தாக்கூர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகாய் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.


கடந்த 2018ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அமலாக்கத்துறை தலைவராக  எஸ்.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அமலாக்கத்துறை தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். அதன்படி, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர் ஓய்வு பெறவிருந்தார். ஆனால், அவருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.


அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே நீட்டிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால், மிஸ்ராவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.


ஆனால், நவம்பர் 2021 இல், மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு அவசரச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கும் மத்திய அரசின் அதிகாரம் வலுப்படுத்தப்பட்டது. நவம்பர் 2022 இல், மிஸ்ராவின் பதவிக்காலம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. இதற்கு எதிராக, மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர்.