ஆக்ஷன் படங்கள் மீது ரசிகர்ளுக்கு என்றுமே ஈர்ப்பு அதிகம். அதிலும் காதல் கலந்த ஆக்ஷன் படங்கள் என்றால் ஒரே மஜா தான். ரசிகர்களுக்கு ஒரு சில நடிகர்களின் ஆக்ஷன் படங்கள் என்றால் மிகவும் விரும்புவார்கள். அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த், ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட நடிர்களின் வரிசையில் அதிக அளவிலான ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஷால். 


டர்னிங் பாயிண்ட்:


நடிகர் விஷால் திரைப்பயணத்தில் மிக முக்கியமான டர்னிங் பாயிண்ட் படமாக அமைந்த படம் தான் 2005ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான 'சண்டக்கோழி' திரைப்படம். மெகா ஹிட் வெற்றி பெற்ற இப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 



அபார வெற்றி :


ஆனந்தம், ரன் என அடுத்தடுத்து வெற்றி படங்களாக கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் லிங்குசாமியின் 'ஜீ' திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. திரைத்துறையில் சறுக்கல் என்பது சகஜமான ஒன்று தான் என்பதை நன்கு அறிந்த லிங்குசாமியிடம் இருந்த அடுத்த படம் அதிரடியாக வெளியே வரும் என  எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அது தான் சண்டக்கோழி.


100 நாள் 150 நாள் அல்ல 200க்கும் மேற்பட்ட நாட்கள் திரையரங்குகளில் கலக்கிய சண்டக்கோழி திரைப்படம் இயக்குநர் லிங்குசாமிக்கு மட்டுமல்ல நடிகர் விஷாலுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம். நடிகர் ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், லால் உள்ளிட்டோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  


பரபரப்புக்கு நடுவே ரொமான்ஸ் :


மதுரையின் பின்னணியில் கரடு முரடான மனிதர்களுக்கு மத்தியில்  பரபரப்பான காட்சிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் அதே வேளையில் மிகவும் அழகான ரம்மியமான ஒரு காதல் கதையும் அவ்வப்போது வந்து மெல்ல வீசும் தென்றல் போல வருடி செல்கிறது. துறுதுறுப்பான நடிப்பால் அப்படியே காந்தம் போல ரசிகர்களை ஈர்த்து விட்டார் மீரா ஜாஸ்மின். அவரின் நடிப்பில் வெளியான படங்களில் இது ஒரு பெஞ்ச் மார்க் என்றே சொல்லலாம். 


 



கிளைமாக்ஸ் காட்சி :



ஊர் பெரியவர் ராஜ்கிரண் மகனான விஷாலுக்கும், லாலும் இடையே வெடிக்கும் ஈகோ மோதல் கிளைமாக்ஸ் காட்சி வரை பயணிக்கிறது. இவர்களின் இந்த மோதலுக்கு இடையே காதல் ஜெயித்ததா என்பது தான் கிளைமாக்ஸ். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் ஒட்டுமொத்த படத்தையும் முழுமையாக ஆக்கிரமித்தது. அதிலும் தாவணி போட்ட தீபாவளி பாடல் இன்று வரை பலரின் பேவரட் பாடலாக  காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக இருந்து வருகிறது. 


சண்டக்கோழி படத்தின் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. வெற்றி பெற்ற படங்களின் பார்ட் 2 வருவது போல சண்டக்கோழி படத்தின் பார்ட் 2வும் வெளியானது. ஆனால் முந்தைய படத்தின் வெற்றிக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.