பிரபலமான இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சொந்தமான ஒரு ஸ்டூடியோ ஏ.ஆர். ஆர்பிலிம் சிட்டி என்ற பெயரில் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டூடியோவில் இன்று காலை ஏற்பட்ட ஒரு விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவில் அவ்வப்போது படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நடிகர் சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 


 



உயிரிழந்த லைட்மேன் குமார்


 


'வெப்பன்' படப்பிடிப்பிற்காக செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அந்த செட் போடும் பணியில் லைட்மேன் குமார் மின்விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். சுமார் 40 அடி உயரத்தில் மின்விளக்குகளை பொருத்தும் சமயத்தில் கால் தவறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயம் ஏற்பட்ட குமார் உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


47 வயதாகும் லைட்மேன் குமார் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர். ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவில் பணியாளர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.