ராயன் ஹைலைட்ஸ்


தனுஷின் ராயன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  படத்தின் ஹைலைட்டான விஷயங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. படத்தின் திரைக்கதையில் ஒரு சில குறைகள் இருந்தாலும் படத்தில் சிறப்பம்சங்களை சுருக்கமாக பார்க்கலாம்.


தனுஷ்


முதல் காரணம் தனுஷ். ஒரு பக்கம் நடிகராகவும் இன்னொரு பக்கம் இயக்குநராகவும் தனுஷை இரு பரிணாமங்களில் பார்ப்பது தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான். 


தனுஷ்ஒரு சிறந்த நடிகர் தான். ஆனால் ராயன் படத்தில் மிக குறைவாக நடித்து அதை நிரூபித்திருக்கிறார் தனுஷ். ஒட்டுமொத்தமாக தனுஷைக் காட்டிலும் மற்ற கதாபாத்திரங்களுக்கே நடிப்பிற்கான ஸ்கோப் அதிகம். தனுஷின் ராயன் கதாபாத்திரம் சிரிப்பதில்லை , நீள நீளமாக வசனம் பேசுவதில்லை , கதறி அழுவதில்லை. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் தனுஷின் தோற்றம் ஒன்றே அவ்வளவு மாஸ். மிக சிக்கனமாக உணர்ச்சிகளை வெளிக்காட்டி கோபமோ, சோகமோ எல்லாவற்றையும் வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.


பாடல்கள்


ராயன் பாடல்கள் முதலில் வெளியானபோது அவை பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. ரஹ்மான் என்ன செய்து வைத்யிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் ஒரே புலம்பல். ஆனால் சன் பிக்ச்சர்ஸ் வழங்கும் என்று டைட்டில் தொடங்கியபோதே இப்படத்தில் ரஹ்மான் சைலண்டாக நிறைய சம்பங்கள் செய்திருக்கிறார் என்பது தெரிந்துவிடும்.


ஒரு காட்சியில் தனுஷ் வில்லன் ஒருவரை மிரட்டுகிறார். பின்னணியில் அடங்காத அசுரன் பாடல் ரஹ்மானின் குரலில் ஹம்மிங் வருகிறது. ரொம்ப சாதாரணமான  ஒரு காட்சியை வெயிட்டானதாக மாற்றிவிடுகிறார் ரஹ்மான்.


பாடல் காட்சியமைப்புகள்


பாடல்கள் நன்றாக இருப்பது மட்டும் போதுமா. அவற்றுக்கு சரியான காட்சியமைப்புகள் இருந்தால் தான் அந்த பாடல் மக்கள் மனதில் இன்னும் நன்றாக பதிகிறது. அந்த வகையில் இரு பாடல்கள் இப்படத்தில் மிகச் சிறப்பாக காட்சியமைப் பட்டிருக்கின்றன.


முதலாவது பாடல் ' வாட்டர் பாக்கெட்'. சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி இடையில் வரும் இந்த கானா பாடலின் இரு விஷயங்கள் ஹைலைட்ஸ். ஒன்று நடனம். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நடிப்பைப் போல் நடனத்திலும் கைகூடி இருக்கின்றன. இரண்டாவது அபர்ணா பாலமுரளியின் ரியாக்‌ஷன்ஸ். பொதுவாக குத்துப்பாடலுக்கு நடமாடுபவர்கள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ளாமல்  ரிலாக்ஸான  ரியாக்‌ஷன்களை  வெளிக்காட்டுவார்கள். இவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பை எவ்வளவு அஸாட்டா போடுறேன் பாரு என்பதை காட்டவே இந்த ரியாக்‌ஷன். அந்த வகையில் அபர்ணா பாலமுரளி கண்களாலும் சின்ன சின்ன முகச்சுளிப்பில் நம்மை நாக் அவுட் செய்கிறார்.


இரண்டாவது பாடல் க்ளைமேக்ஸில் வரும் அடங்காத அசுரன். ரஹ்மானின் இசை , பிரபுதேவாவின் நடனம், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு , படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து அசுரத்தனமாக ஆட பத்து தலை ராவணனைப் போல் தனுஷ் சைலண்டாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது என இந்த பாடல் அசுரர்களின் கூத்தாட்டம் போல் ஒரு தனி வைப் . 


பிரபுதேவா இந்தப் பாடலின் நடனத்தை வேண்டுமென்றே பார்ப்பதற்கு அலங்கோலமாக கட்டமைத்திருக்கிறார். வழக்கமான சினிமாப் பாடல்களுக்கான நடனம் மாதிரி தெரியாமல் சாதாரண மனிதர்கள் சாமி வந்தால் ஆடுவது போல் ஒரு அலங்கோலத் தன்மையை நாம் கவனிக்கலாம். படம் முழுவதும் ஒரு இடத்தில்கூட வெளிப்படையாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாத தனுஷ் ஆடத் துவங்குவதைப் பார்க்கும் போது ஒருவிதமான சிலிர்ப்பை உணரலாம்.


செல்வராகவன்


பெரும்பாலும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது என்றாலும் செல்வராகவனின் சேகர் கதாபாத்திரம் நம் மனதில் ஒரு தனி இடத்தை பிடிக்கும். புதுப்பேட்டைப் படத்தில் கொக்கி குமாரின் தீவிர விஸ்வாசியாக இருக்கும் அவன் நன்பர்கள். மயக்கம் என்ன படத்தில் தனுஷின் நண்பனின் தந்தை என கடைசிவரை நல்லதை மட்டுமே நினைக்கும் சில கதாபாத்திரங்களை செல்வராகவன் உருவாக்கி இருக்கிறார். அப்படியான ஒரு கதாபாத்திரம் சேகர். சிறுவனாக தனது தம்பி தங்கைகளுடன் வந்து சேரும் ராயனுக்கு இறுதிவரை துணையாக நிற்பவர் சேகர்.


ராயன் 2


எல்லாவற்றுக்கும் மேல் ராயன் 2 படத்திற்கான எல்லா லீடும் இப்படத்தில் இருக்கின்றன. அதற்கேற்றார்போல் தான் க்ளைமேக்ஸும் ஓப்பனாக விடப்பட்டுள்ளது. எப்போது என்று தெரியாவிட்டாலும்  ராயன் 2 நிச்சயம் வரும் என்பது உறுதி.