விக்ரம் படத்தின் அதிரிபுதிரி ஹிட்டைத் தொடர்ந்து, கோலிவுட் கொண்டாடும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறியுள்ளார்.
லியோ அப்டேட் கொடுத்த லோகி
தொடர்ந்து மாஸ்டர் படத்துக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இரண்டாம் முறையாக லோகேஷ் கூட்டணி வைத்துள்ள நிலையில், முன்னதாக லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முன்னதாக தனியார் தொலைக்காட்சியின் விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படம் பற்றிய சிறு அப்டேட் கொடுத்து விஜய் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
ப்ளடி ஸ்வீட்
நிகழ்ச்சியில் லியோ படத்தின் ‘ப்ளடி ஸ்வீட்’ என்ற டயலாக் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஆரம்பிக்காலாங்களா.. மாதிரிதான் ப்ளடி ஸ்வீட்டும். படத்துல இருக்கும் எஞ்சாய் பண்ணுவீங்க” என பதிலளித்தார்.
மேலும் லியோ படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்.சி.யுவில் இடம்பெறுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு,“படம் வர இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. நான் மெதுவாக அப்டேட் தருகிறேன்” என லோகேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து லியோ படம் குறித்த அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், “லியோ சிறப்பான ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும். 60 நாள்கள் முடிஞ்சது, 60 நாள்கள் இன்னும் ஷூட்டிங் இருக்கு” என லோகேஷ் தெரிவித்தார்.
சென்னையில் படப்பிடிப்பு
செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தின் பேனரின் கீழ் லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் நிலையில், சண்டைப்பயிற்சியாளராக அன்பறிவும், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டரும் பணியாற்றுகிறார்கள்.
விஜய், த்ரிஷாவுடன் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர் , பிரியா ஆனந்த் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். சென்னையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
லியோ படத்தின் தற்போதைய படப்பிடிப்பு சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. மற்றொருபுறம் லியோ திரைப்படம் எல்சியு உலகத்தைச் சேர்ந்தது என்றும், விக்ரம் படத்தின் ப்ரீக்வெல் லியோ எனவும் இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.