லியோ படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்தை அட்டாக் செய்யும் வகையில் அப்படத்திற்கு வசனம் எழுதியவரும் , இயக்குநருமான ரத்னகுமார் பேசிய கருத்து இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் என பலரும் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்தார். 


லியோ படம் இதுவரை ரூ.540 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (நவம்பர் 1) லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏற்கனவே அதிக பாஸ் கோரிக்கை,  பாதுகாப்பு பிரச்சினை காரணமாக செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காத நிலையில், இந்த வெற்றி விழா திரையுலகினர் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 


இந்நிகழ்ச்சியில் பேசிய லியோ படத்திற்கு வசனம் எழுதியவரும் , இயக்குநருமான ரத்னகுமார் பேசிய கருத்து இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விழாவில் பேசிய அவர், “நம்ம எவ்வளவு உயர போனாலும் பசிச்சா கீழே வந்து தான் ஆகணும்” என ஒரு கருத்தை கூறினார். இது நடிகர் ரஜினிகாந்தை தான் தாக்கி பேசுவது போல இருப்பதாக இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரத்னகுமார் கருத்துக்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது. 


ஏற்கனவே ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காகம் - கழுகு கதை ஒன்றை சொன்னார். அப்போது, ‘என்னதான் காகம் தொந்தரவு செய்தாலும் கழுகு அமைதியாக தான் இருக்கும். ஆனால் கழுகு பறக்கும் உயரத்துக்கு என்ன முயற்சித்தாலும் காகம் பறக்காது. அப்படி வாழ்க்கையில நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இலக்கை நோக்கி சென்றால் முன்னேறி விடலாம்’ என தெரிவித்தார். இவர் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்யை தான் காகம் என சொன்னதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் கருத்து மோதலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.