பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழா எதிர்பாராதவிதமாக ரத்தான நிலையில், சோகத்தில் ஆழ்ந்திருக்கும் விஜய் ரசிகர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் லியோ இரண்டாவது சிங்கிள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.


லியோ இசை வெளியீட்டு விழா ரத்து


லோகேஷ் கனகராஜின் ஐந்தாவது படமாகவும், நடிகர் விஜய் உடனான லோகேஷின் இரண்டாவது படமாகவும் பெரும் எதிர்பார்ப்புகளிடையே வரும் அக்.19ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் லியோ.


இப்படத்தின் ட்ரெய்லர் வரும் செப்டெம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாகவும்,  இந்த விழாவுக்கான டிக்கெட்டுகள் முழுவீச்சில் விற்கப்பட்டு வருவதாகவும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.


ஆனால் நேற்று இரவு லியோ இசை வெளியீட்டு விழா ரத்து என வந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும், டிக்கெட்டுகள் அதிக அளவில் கோரப்படுவதாலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தாங்கள் நடத்த வேண்டாம் என முடிவு செய்ததாக படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியானது. 


இரண்டாவது சிங்கிள் அப்டேட்


இதற்கு அரசியல் அழுத்தம் காரணமில்லை என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்தான சோகத்தில் நேற்று முதல் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கவலை மற்றும் ஆற்றாமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.


படக்குழு சார்பில் இதற்கு மாற்றாக அடுத்தடுத்து தொடர் அப்டேட்கள் தந்து விஜய் ரசிகர்களை மகிழ்விப்போம் எனத் தெரிவிக்கப்பட்டாலும், விஜய் ரசிகர்கள்  இணையத்தில் தங்கள் அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.


லோகேஷ் ட்வீட்


இந்நிலையில், லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லியோ தாஸ் எனக் குறிப்பிட்டு விஜய்யின் அசத்தலான போஸ்டர் ஒன்றையும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இந்தத் தகவல் துவண்டு போயிருந்த விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 






ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?


இதேபோல் லியோ ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இசை வெளியீட்டு விழா ஏற்பாடு வரை சென்று ரத்தான நிலையில், இதற்கு மாற்றாக ட்ரெய்லரை வெளியிடுவது தான் ஒரே தீர்வு என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இந்தத் தகவல் சற்றே விஜய் ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.


விஜய்யும் த்ரிஷாவும் பல ஆண்டுகளுக்குப் பின் லியோ படத்தில் இணைந்துள்ள நிலையில், சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், பிரியா ஆனந்த்,  மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.