லியோ திரைப்படத்தின் Bad Ass பாடல் நேற்று வெளியாகிய நிலையில் 8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடித்து உருவாகி இருக்கும் லியோ. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைத்து 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
லியோ ஆடியோ லாஞ்ச்
லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெறும் எனக் கூறப்பட்டது. இப்படியான நிலையில் அதிகப்படியான கூட்டம் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு லியோ படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சியை ரத்து செய்தது படக்குழு.
ஏமாற்றமடைந்த ரசிகர்கள்
லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் படக்குழு வெளியிட்ட தகவலுக்கு பிறகு பெரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். ஒவ்வொரு படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியின் போதும் மேடையில் விஜய் பேசும் கருத்துக்களை கேட்க ரசிகர்கள் தவமாய் காத்திருப்பார்கள்.
விரைவில் அரசியலில் நடிகர் விஜய் களமிறங்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், லியோ படத்தின் இசைவெளியீட்டில் தனது அரசியல் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் அழுத்தங்களே காரணம் என்று ஒரு பக்கம் விவாதம் கிளம்பியது.
இதனைத் தெளிவுபடுத்தும் வகையில் எந்த விதமான அரசியல் காரணங்களும் இல்லை என்று படக்குழு தெரிவித்தது. மேலும் ரசிகர்களுக்குத் தேவையான அப்டேட்களை தொடர்ச்சியாக படக்குழு வழங்க இருப்பதாகத் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று லியோ படத்தின் Bad Ass பாடல் வெளியிடப்பட்டது.
பார்வையாளர்களை குவிக்கும் Bad Ass
அனைத்து பெரிய நடிகர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் மிரட்டலான மாஸ் பாடல்களை வழங்கி வரும் அனிருத் குரலில் உருவாகி உள்ளது Bad Ass பாடல். முதன்முறை கேட்கும்போது கொஞ்சம் சிங்க் ஆக முடியவில்லை என்றாலும், கேட்க கேட்க பிடிப்பதே அனிருத் ரக பாடல்களின் சிறப்பாக இருக்கிறது. இப்படியான சூழலில் பாடல் வெளியாகி 24 மணி நேரம் கூட இன்னும் ஆகாத நிலையில், 8 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் கடந்துள்ளது இந்தப் பாடல். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.