அரசின் கடமை என்பது, மக்களை காப்பதே தவிர, அவர்களை அடக்குமுறைக்கு ஆளாக்குவது அல்ல. ஆனால், அதிகாரத்தின் சின்னமான அரசாங்கம், பல நேரங்களில் விளிம்புநிலை மக்களையும் குரலற்றவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளது. அம்மாதிரியான நிகழ்வுதான், கடந்த 1992ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கியது.


வாச்சாத்தி கொடூரம்:


ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்த போது, தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி என்ற பழங்குடி கிராமம், அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தை பார்க்க நேர்ந்தது. இந்திய வரலாற்றில் இருண்ட பக்கங்களாய் பதிவானது. சந்தன மரத்தை கிராம மக்கள் கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டிய அரசு அதிகாரிகள் சோதனை செய்வதாகக் கூறி, கிராமத்தை சூறையாடினர். வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், தொடர்ந்து மூன்று நாள்கள் மூர்க்கத்தனமான செயலில் ஈடுபட்டனர்.


சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்துதான், வாச்சாத்தியில் என்ன நடந்தது என்பதே வெளி உலகுக்கு தெரிய வந்தது. குறிப்பாக, வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்தை தொடர்ந்து, கிராம மக்கள் அவர்களுக்கு அளித்த வாக்குமூலம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


பாதிக்கப்பட்ட கிராம மக்களின் வாக்குமூலம்:


18 இளம்பெண்களை கொடூரமாக தாக்கி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர் அரசு அதிகாரிகள். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிலர் குழந்தைகள். கிராம மக்களின் வீடுகளை சூறையாடி, அவர்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை திருடி சென்றுள்ளனர். மக்களை கொடூரமாக தாக்கியுள்ளனர்.


இளம் பெண்கள், குழந்தைகள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து, அரசு அதிகாரிகள் சொல்ல முடியாத அளவுக்கு கொடூர செயலில் ஈடுபட்டனர். அரூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவர்களை தாக்கி, சேலம் சிறையில் அடைத்தனர். 


இதில் குற்றஞ்சாட்ட 269 பேரை குற்றவாளி என விசாரணை நீதிமன்றம், கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில், 17 பேர் மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அரசு பயங்கரவாத்தில் ஈடுபட்டதாக 217 அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தோளோடு தோள் நின்ற கம்யூனிஸ்ட் இயக்கம்:


பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நீதியை பெற்ற தர வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன், ஒட்டு மொத்த அரசு இயந்திரத்திற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் அவர்களுடன் துணை நின்றது கம்யூனிஸ்ட் இயக்கங்கள்தான். சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, தமிழ்நாடு பழங்குடி கூட்டமைப்பை சேர்ந்த பி. சண்முகம், கிராமத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள் நின்றார். சண்முகம், அரூர் முன்னாள் எம்எல்ஏ தில்லி பாபு உள்ளிட்டோர், நீதியை நோக்கிய அவர்களின் பயணத்தில் அவர்களுடன் சக பயணிகளாக பயணித்தனர். 


இந்த விவகாரத்தில் தங்களுக்கு விதித்த தண்டனைக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்து நீதியை நிலைநாட்டியுள்ளது.