நடிகர் விஜயின் லியோ படக்குழு அடுத்தடுத்து வெளியிட்ட 4 போஸ்டர்கள் அடிப்படையில் அந்த படத்தின் கதை(LEO Movie Story) என்னவாக இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
லியோ போஸ்டர் கொண்டாட்டம்:
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் திரைப்படம் லியோ. அக்டோபர் 19ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு முந்தையை வியாபாரத்திலேயே புதிய சாதனை படைத்துள்ளது. இதனால், வசூலில் ஆயிரம் கோடியை எட்டிய முதல் தமிழ் திரைப்படமாக லியோ இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான், ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் கடந்த நான்கு நாட்களாக, லியோ படக்குழு தொடர்ந்து புதுப்புது போஸ்டர்களை வெளியிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் அந்த போஸ்டர்கள் வெளியாகின.
கதைக்களம் என்ன?
அந்த போஸ்டர் தொடர்பான அறிவிப்பின்போதே, போஸ்டர்கள் மூலமே படத்தின் கதைக்களம் என்ன என்பது விளக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தான், ஒவ்வொரு போஸ்டரும் ஒவ்வொரு டோனில் வெளியானதோடு, அதில் இடம்பெற்று இருந்த வார்த்தைகளும் கவனம் ஈர்த்தன. தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததன்படி, 4 போஸ்டர்களும் வெளியான நிலையில், அதனடிப்படையிலேயே லியோ படத்தின் கதையை ரசிகர்களால் ஓரளவிற்கு கணிக்க முடிகிறது என்பதே உண்மை.
போஸ்டர்கள் சொல்வது என்ன?
அந்த போஸ்டர்களை வரிசைப்படி பார்த்தாலே லியோ ஒரு பழிவாங்கும் கதைக்களத்தை கொண்ட படம் தான் என்பது தெளிவாக புரிகிறது. முதல் போஸ்டரில், அமைதியாக இருந்து பிரச்னயை தவிருங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டாவது போஸ்டரில் அமைதியாக இருந்து தப்பிப்பதற்கான வழியை உருவாக்குங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மூன்றாவது போஸ்டரில் அமைதியாக இருந்து போருக்கு தயாராகுங்கள் எனவும், நான்காவது போஸ்டரில் அமைதியாக இருந்து சாத்தானை எதிர்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
லியோ படத்தின் கதை இதுதானா?
இந்த நான்கு போஸ்டர்களையும் சேர்த்து பார்த்தால், ”ஏதோ ஒரு மோசமான பின்புலத்தை கொண்ட விஜய் இனி எந்த பிரச்னையும் வேண்டாம் என ஒதுங்கி திரிஷாவுடன் வாழ்ந்து வருகிறார். ஆனாலும், அவரது பழைய வாழ்க்கை விஜயை மீண்டும் துரத்தி வருகிறது. அதில் இருந்து எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தப்பிக்க ஒரு திட்டம் வகுக்கிறார். வன்முறை இல்லாமல் பிரச்னையை கடக்க முயலும் முயற்சி தோல்வியை சந்திக்க, பிரச்னையை நேரடியாகவே எதிர்கொள்ள தயாராகிறார். இறுதியில் தனது வில்லனை எதிர்த்து வீழ்த்தி தனது அமைதியான வாழ்க்கையை மீட்டெடுக்கிறார்” என தெரிய வருகிறது. ஏற்கனவே லியோ படம் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற காமிக்ஸை தழுவி தான் எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. தற்போது இந்த போஸ்டர் மூலம் நாம் உணரும் கதைக்களமும், அந்த காமிக்ஸின் கதைக்களமும் ஒன்றி போகிறது. அந்த காமிக்ஸின் கடைசி 4 பிரதிகளை படித்தால் ரத்தம் தெறிப்பதை மட்டுமே உணர முடியும். அப்படி எனில் லியோ படத்திலும் ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.