சென்னையில் மொத்தமாக 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. 


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்:


கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி பணிபுரியும் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று, குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். கிராமப்புறங்களில் விநாயகர் சதுர்த்தி அன்று ஒரே நாளில் நிறைவடைந்தாலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இன்னும் முழுமையாக முடியவில்லை. 


சென்னையில் 1,510 சிலைகள்:


விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரத்யேக சிலைகள் வைக்கப்பட்டு பிரத்யேக வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன. 10 அடிக்கு மேல் சிலை இருக்கக் கூடாது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் உருவாக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை மாநகர எல்லையில் மட்டும் பல்வேறு இடங்களிலும் சேர்த்து, காவல்துறை அனுமதியுடன் மொத்தமாக ஆயிரத்து 510 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை வார இறுதியான வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னையில் 4 இடங்களில் அனுமதி:


இந்த நிலையில், சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, காசிமேடு, திருவொற்றியூர், பட்டினம்பாக்கம் மற்றும் நீலாங்கரை, ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்பதை ஒட்டி நடைபெறும் ஊர்வலத்தின் போது 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே மதுரை, திருவண்ணாமலை மற்றும் சேலம் போன்ற நகர்ப்பகுதிகளில் சிலைகளை கரைப்பதை ஒட்டி நடந்து முடிந்த, விநாயகர் சிலை ஊர்வலங்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக இந்த விழாவை கொண்டாடினர். இதனால், அந்த பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. 


நீதிபதி சொன்ன அதிரடி கருத்துகள்:


முன்னதாக விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலத்திற்கு அனுமதிக்கவும் காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் ஏற்கப்படாது என்று மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தார். அதேநேரம்,   சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்காத நிலையில், இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? என கேள்வி எழுப்பினார். அதோடு, விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் தான் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் சொந்த கருத்துகளே எனவும் விளக்கமளித்தார்.