லியோ திரைப்படத்தை முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களுக்கான படமாக எடுக்கவே விஜய் விரும்பியதாகவும் பான் இந்தியா திரைப்படமாக எடுக்க விஜய் விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


லியோ:


கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கோலிவுட் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்கும் கம்ர்ஷியல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உருவெடுத்துள்ளார்.


மாஸ்டர் படத்துக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இரண்டாம் முறையாக லோகேஷ் கூட்டணி வைத்துள்ள நிலையில், விஜய்யின் 67ஆவது படமான இப்படத்துக்கு லியோ எனத் தலைப்பிட்டு கடந்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


முழுவீச்சில் படப்பிடிப்பு:


தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதியையும் அறிவித்து மாஸாக ஷூட்டிங் பணிகளைத் தொடங்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் முன்னதாக காஷ்மீரில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பினர்.


தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பாதி நாள் ஷூட்டிங் முடிந்து அடுத்த பாதி ஷூட்டிங் நடைபெற்று வருவதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாகப் பகிர்ந்திருந்தார்.


விஜய் கண்டிஷன்:


லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, இயக்குநர் மிஷ்கின், கௌதம் மேனன், நடிகை பிரியா ஆனந்த், நடிகர் மன்சூர் அலிகான் என மிகப்பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகிறது. 


முன்னதாக லோகேஷ் - கமல்ஹாசன் இணைந்த விக்ரம் படம் பான் இந்தியா படமாக வெளியாகி கவனமீர்த்த நிலையில், தற்போது லியோ படமும் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களுக்கான படமாக எடுக்கவே விஜய் விரும்பியதாகவும், பான் இந்தியா திரைப்படமாக எடுக்க விஜய் விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


பான் இந்தியா படம்:


இது குறித்து முன்னதாகப் பேசியுள்ள தயாரிப்பாளர் லலித் குமார், லியோவை பான் இந்தியா படமாக செய்ய வேண்டாம் என்றும், தமிழ் ரசிகர்களுக்கு திருப்திகரமாக படமாக லியோ இருக்க வேண்டும் எனவும் கூறி அதனை வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.


ஆனால் தயாரிப்பாளர்கள் லலித் மற்றும் ஜெகதீஷ் இருவரும் விஜய்யிடம் பேசி பான் இந்தியா படத்துக்கு அவரை ஒப்புக்கொள்ள வைத்ததாகவும், மேலும் பான் இந்தியா ஆடியன்ஸை கவர ஒரிஜினல் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் லலித் குமார் தெரிவித்துள்ளார்.


இசை வௌியீடு:


லியோ படத்தின் மூலம் நடிகை த்ரிஷாவுடன் விஜய் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவும் பணிபுரிகின்றனர்.


எடிட்டிங் பணிகளை ஃபிலோமின் ராஜ் மேற்கொள்ள, வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் எழுதுகின்றனர்.


இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் தமிழ்நாட்டின் பகுதிகளில் நடத்த விரும்புவதாகவும், திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நிகழ்ச்சியை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.