பிரிட்டன் துணை பிரதமரும் நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் இன்று ராஜினாமா செய்துள்ளார். அமைச்சரவை ஊழியர்களை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், அவர் மீது எழுந்த புகார்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டது. 


ராஜினாமா செய்த துணை பிரதமர்:


இச்சூழலில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் டொமினிக் ராப். இதுகுறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவர், "நான்தான் விசாரணைக்கு அழைப்பு விடுத்தேன். நான் யாரயாவது கொடுமைப்படுத்தியது கண்டறியப்பட்டால், ராஜினாமா செய்வதாக உறுதியளித்தேன். என் சொல்லைக் காப்பாற்றுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன்.


சுதந்திரமான விசாரணையில் எனக்கு எதிராக கூறப்பட்ட சில கூற்றுக்கள் நியாயமானவை என்று கண்டறியப்பட்டதை அடுத்து, துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன்.


குற்றச்சாட்டின் மீதான விசாரணை எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை தவிர மற்ற அனைத்தையும் நிராகரித்துள்ளது. நான்கரை ஆண்டுகளில், ஒரு முறை கூட நான் யாரிடமும் கத்தியதில்லை. எதையும் தூக்கி எறியவில்லை, யாரையும் மிரட்டவில்லை, வேண்டுமென்றே யாரையும் சிறுமைப்படுத்த முயன்றது இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.


அரசின் முக்கிய பதவிகளை வகித்துள்ள டொமினிக் ராப்:


கடந்த 2015ஆம் ஆண்டு, அரசில் இளைய அமைச்சராகச் சேர்ந்ததில் இருந்து ராப் பல உயர் பதவிகளை வகித்துள்ளார். துணைப் பிரதமராகப் பணியாற்றியதோடு, பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் அரசாங்கத்தில் நீதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.


கடந்தாண்டு அக்டோபர் மாதம், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதில் இருந்து மூன்று முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். தனிப்பட்ட நடத்தை தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர்கள் பதவி விலகியது தொடர் பேசுபொருளாக இருந்து வருகிறது. 


சக அமைச்சர்கள் மீது தனிப்பட்ட நடத்தை தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அரசாங்கம் நேர்மையாக நடத்தப்படும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம், ராப் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க மூத்த வழக்கறிஞர் ஆடம் டோலியை சுனக் நியமித்துள்ளார்.


ராப்புடன் பணியாற்றிய பல அரசு ஊழியர்கள், அவருக்கு எதிராக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிக்கையை ரிஷி சுனக்கிற்கு ஆடம் டோலி நேற்று அனுப்பியுள்ளார்.


ராப்புக்கு எதிரான புகார்கள் குறித்து விளக்கம் அளித்த ரிஷி சுனக், "ராப் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவருக்கு எதிரான புகார் அறிக்கை குறித்து கவனமாக பரிசீலித்து வருகிறேன்" என்றார். ஆனால், அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.