லியோ திரைப்படம்
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இதனால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் பாக்ஸ் ஆஃபிஸில் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. முன்னதாக தொடர் விடுமுறை காரணமாக திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். லியோ திரைப்படம் பல்வேறு சிக்கல்களும் சர்ச்சைகளையும் சந்தித்த போதிலும் டிக்கெட் முன்பதிவுகளில் அபாரமான சாதனை படைத்தது.
லியோ நடிகர்கள்
விஜய் , த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், அனுராக் கஷ்யப், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் குட்டி, மாயா கிருஷ்ணன் என் மிகப்பெரிய நடிகர் பட்டாளம் லியோ படத்தில் நடித்துள்ள போதிலும் அவர்களை சரியான அளவில் பயன்படுத்தவில்லை என்கிற விமர்சனம் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் மீதான விமர்சனங்கள் காரணமாக படத்தின் வசூலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
முதல் நாள் வசூல்
அதன்படி, முதல் நாளிலேயே படம் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாயை வசூலாக அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நடப்பாண்டில் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் என கூறப்பட்டது. ஆனால் குறைவான திரையரங்குகளில் வெளியான போதிலும் லியோ திரைப்படம் இவ்வளவு பெரிய வசூல் இலக்கை எப்படி எட்ட முடியும் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வசூல் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் வசூல் குறித்த எந்த விதமான தகவலையும் அதிகாரப் பூர்வமாக படக்குழு வெளியிடாமல் இருந்து வருகிறது.
லியோ ஒரு வார வசூல்
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக லியோ ஒரு வார வசூல் நிலவரத்தைப் பகிர்ந்துள்ளது. அதன்படி லியோ திரைப்படம் 7 நாள்களில் ரூ. 461 கோடிகளை வசூலித்துள்ளதாகவும், ஒரு வார காலத்தில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படமாக லியோ உருவெடுத்துள்ளதாகவும் செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ”பல ராஜாக்கள பாத்தாச்சு மா, நீ ஒரசாம போயிடு” எனும் கேப்ஷனையும் படக்குழு பகிர்ந்துள்ளது.
படக்குழு பகிர்ந்துள்ள இந்த அதிகாரப்பூர்வத் தகவல் பாக்ஸ் ஆஃபிஸ் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் லியோ விரைவில் லியோ 500 கோடிகள் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.