தமிழ் திரையுலகின் மிகப்பெரிய பாடலாசிரியராக உலா வந்தவர் நா.முத்துக்குமார். அவர் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும் அவரது பாடல்கள் காலத்திற்கும் அழியாத பாடலாக உள்ளது. இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரும், பாடலாசிரியருமான யுகபாரதி முத்துக்குமார் பற்றி கூறியதாவது,


தேசிய விருது: 


"முதல் தேசிய விருது முத்துக்குமாருக்கு கிடைத்தது. அப்போது, முத்துக்குமாருக்கு நான் அழைப்பு விடுத்து வாழ்த்து கூறினேன். வாழ்த்து சொன்னவுடன் முத்துக்குமார் வாழ்த்துகள்டா.. வாழ்த்துகள்டா.. உனக்கு கிடைச்சரும்னு நினைச்சேன்னு சொன்னாரு. ஏம்பா.. எனக்கு இல்ல.. உனக்கு கிடைச்சுருக்கு. உன் பேரு வருது. உனக்கு கொடுத்துருக்காங்க. ஓ அப்படியா.. சரி.. சரி மகிழ்ச்சி என்றார்.


இரண்டாவது தடவை அவருக்கு விருது கிடைக்குறப்பவும் நான் முதல் தொலைபேசி பண்றேன். திருவண்ணாமலையில பவா செல்லுதுரையை பாத்துட்டு ஏதோ வந்துட்டு இருக்கேனு சொன்னாரு. அப்போ சொன்னேன். இப்போவாது உனக்கு கொடுத்துட்டாங்களா பா? என்று கேட்டாரு. இப்பவும் உனக்குத்தான் பா கொடுத்துருக்காங்க அப்படினு சொன்னவும், எப்பப்பா நீ வாங்குவ? என்று கேட்டாரு. 


முத்துக்குமார் சொன்ன பதில்:


வருஷா வருஷம் நீ வாங்கிட்டு இருந்தா நான் எப்படி வாங்குறது? என்று அப்படி சொன்னேன். வேணும்னு நான் இந்த வருஷம் நான் பாட்டே எழுதலடா. நீ எழுதி வாங்கிக்குறியா? என்றார். இப்படி எவனும் கேக்கமாட்டேன். இப்படி கேக்குறது ஒரு நண்பன் வேணும். அவன் முத்துக்குமாரனாக இருக்க வேண்டும். இவ்வாறு  அவர் கூறியுள்ளார். 


முத்துக்குமார் - யுகபாரதி:


நா. முத்துக்குமார் மலபார் போலீஸ் படத்தில் முதன்முதலாக பாடல் எழுதத் தொடங்கினார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், விஜய், அஜித், விக்ரம், சரத்குமார், முரளி, பிரபுதேவா, சூர்யா, சத்யராஜ், மாதவன், சிம்பு, பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். 


தமிழ் சினிமாவின் பல எவர்கிரீன் பாடல்களையும் முத்துக்குமார் எழுதியுள்ளார்.  பல திரை விருதுகளை வென்றுள்ள முத்துக்குமார் மாநில விருதுகளையும், தேசிய விருதையும் வென்றுள்ளார். 


தமிழ் சினிமாவின் பல வெற்றிப்பாடல்களை எழுதியவர் யுகபாரதி. பல்லாங்குழியின் வட்டம், காதல் பிசாசே, வசியகாரி, மன்மதராசா என தமிழ் சினிமாவின் பல ப்ளாக்பஸ்டர் பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். மது மற்றும் புகைப்பழக்கம் அதிகம் இருந்த முத்துக்குமார் கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய 41வது வயதிலே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  முத்துக்குமார் மறைந்தபோது பல இயக்குனர்களும், எழுத்தாளர்களும், இசையமைப்பாளர்களும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் கடும் வேதனை அடைந்தனர்.