'இதுதான் சபையை நடத்துற லட்சணமா' ஓம் பிர்லாவுக்கு எதிராக கொதித்த ராகுல் காந்தி.. என்னாச்சு?
"நான் எழுந்து நிற்கும் போதெல்லாம், எனக்குப் பேச அனுமதி இல்லை. நாங்கள் என்ன சொல்ல விரும்புகிறோமோ அதைச் செய்ய எங்களுக்கு அனுமதி இல்லை. நான் எதுவும் செய்யவில்லை. நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என ராகுல் காந்தி கூறினார்.

மக்களவையில் பேச தனக்கு அனுமதி தரப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லா மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதுதான் சபையை நடத்தும் விதமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓம் பிர்லா மீது பரபரப்பு புகார்:
Just In




கும்பமேளா குறித்து பிரதமர் கடந்த வாரம் மோடி மக்களவையில் உரையாற்றியிருந்தார். "பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா இந்தியாவின் திறன்களை உலகிற்கு வெளிப்படுத்தியது. இந்த மெகா நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்" என பேசியிருந்தார்.
கும்பமேளாவில் நடந்த மரணங்கள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள், இதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். ஆனால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் பேசலாம் என நாடாளுமன்ற விதி 372ஐ சுட்டிக்காட்டி சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, தனக்கு பேச அனுமதி தர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவருக்கு பேச அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய ராகுல் காந்தி, "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
"ஒரு வார்த்தை கூட பேசல"
நான் அவரைப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர் (சபாநாயகர்) ஓடிவிட்டார். இது சபையை நடத்துவதற்கான வழி அல்ல. சபாநாயகர் வெளியேறிவிட்டார். அவர் என்னைப் பேச விடவில்லை. அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற ஒன்றைச் சொன்னார். பின்னர். சபையை ஒத்திவைத்தார். இது, தேவை இல்லாத சர்ச்சை.
நான் எழுந்து நிற்கும் போதெல்லாம், எனக்குப் பேச அனுமதி இல்லை. நாங்கள் என்ன சொல்ல விரும்புகிறோமோ அதைச் செய்ய எங்களுக்கு அனுமதி இல்லை. நான் எதுவும் செய்யவில்லை. நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி இல்லை. இது ஒரு புதிய தந்திரம். எதிர்க்கட்சிக்கு இடமில்லை. அன்று, பிரதமர் கும்பமேளா பற்றிப் பேசினார். நான் அதுகுறித்து பேச விரும்பினேன். வேலையின்மை பற்றிப் பேச விரும்பினேன். ஆனால், எனக்கு அனுமதி இல்லை. சபாநாயகரின் அணுகுமுறை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. இது ஜனநாயகமற்ற செயல்" என்றார்.
முன்னதாக, எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டிய சபாநாயகர், "உறுப்பினர்களின் நடத்தை இந்த அவையின் மாண்புக்கு ஏற்றதாக இல்லாத பல நிகழ்வுகள் எனது கவனத்திற்கு வந்துள்ளன. இந்த அவையில் தந்தை-மகள், தாய்-மகள் மற்றும் கணவன்-மனைவி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற விதி 349 இன் படி நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்.