நடிகர் லெஜண்ட் சரவணனின் திரையுலக என்ட்ரி இன்னும் இரு தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் அவரைப் பற்றிய சில தகவல்களை காணலாம்.
பொதுவாக ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்ய சினிமா பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்த காலக்கட்டத்தில் நம்மில் பலருக்கும் அந்த நிறுவனங்களின் ஓனர்கள் பற்றி துளியும் தெரியாது, அப்படி பெயர் தெரிந்தாலும் அவர்கள் எப்படி இருப்பார்கள் என தெரியாது. விளம்பரத்தில் வரும் பிரபலத்தை வைத்து தான் கடையேயே அடையாளம் சொல்வார்கள்.
இந்த ட்ரெண்டை மொத்தமாக மாற்றியதே லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் சரவணன் தான். சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார். பலரும் அவரை உருவகேலி செய்ய தொடங்கினர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்ததாக நயன்தாராவுடன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகைச் சேர்ந்த சிலர் அவரை வெளிப்படையாக விமர்சித்தனர்.
ஆனால் அது உண்மையில்லை என சொல்லப்பட்டாலும் லெஜண்ட் சரவணாவின் சினிமா எண்ட்ரி குறித்த அறிவிப்பு வெளியானது. அதுவரை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்கி வந்த இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் இப்படத்தை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை, விவேக், பிரபு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கடந்த ஏப்ரல் மாதம் படத்தின் முதல் பாடல் வெளியாகி யூட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. கடந்த மாதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 5 மொழிகளில் பேன் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்திற்காக லெஜண்ட் சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் ஒவ்வொரு மாநிலத்திற்கு ப்ரோமோஷனுக்காக சென்றுள்ளனர். கிட்டதட்ட 2500 தியேட்டர்களில் படம் வெளியாகவுள்ளதால் திரையுலகினரே ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இதனிடையே பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனக்கு ரஜினி, விஜய் தான் இன்ஸ்பிரேஷன் என்றும், சிறுவயதில், இருந்தே ரஜினியின் படங்களையும், ஸ்டைலையும் பார்த்து ரசித்தவன். அதனால் படத்தில் நடிக்க வேண்டும் என்ற போது ரஜினியின் ஸ்டைல் வந்து விடக்கூடாது என ஒவ்வொரு காட்சியிலும் கவனமாக இருந்தேன். ஆனால் என்னையும் மீறி அந்த ஸ்டைல் சில நேரம் வந்து விடுகிறது என கூறியுள்ளார்.
மேலும் சிறு வயதில் இருந்தே தனக்கு நடிக்க ஆசை இருந்தாலும், தொழில் என வேறு பாதையில் சென்ற தனக்கு நடிப்பதற்கான சூழல் தற்போது தான் அமைந்துள்ளதாக தெரிவித்தார். என்னதான் உருவக்கேலி, பணம் இருப்பதால் இப்படியொரு முயற்சி மேற்கொள்கிறார் என பல விமர்சனங்களை சந்தித்தாலும் சரவணன் முயற்சியை “லெஜண்ட்” என்ற அடையாளமாகமே ரசிகர்கள் பார்க்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்