தமிழில் மாறன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ‘தங்கமகன்’ படத்திற்கு தனுஷூம் அனிருத்தும் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இந்தத் திரைப்படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை அண்மையில் வெளியிட்டது. இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
முன்னதாக, இந்த படத்திலிருந்து நடிகர் தனுஷ் எழுதி பாடிய ’தாய் கிழவி’ பாடல் வெளியானது. எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. மேலும், வயதான பெண்களை இந்த பாடல் கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. தாய் கிழவி பாடலை திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கையும் விடப்பட்டது.
இந்த பாடலை தொடர்ந்து ’கண்ணால பேசி பேசி கொல்லாதே’ பாடல் கடந்த வாரம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. தற்போது பெரும்பாலான காதலர்களுக்கு அந்த பாடல்தான் ரிங்டோனாகவும் இருந்து வருகிறது. இந்த படத்தின் மூன்றாவது பாடலான ’பழம்’ நாளை வெளியாகும் என படக்குழு இன்று காலை போஸ்டர் மூலம் தகவலை வெளியிட்டது.
இந்த நிலையில், படக்குழு வெளியிட்ட போஸ்டரும், துல்கர் நடிப்பில் நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் வெளிவந்த ஹே சினாமிகா பட போஸ்டரும் ஒரே போலவும், அப்பட்டமாக அப்படியே இருப்பதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, ”திருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? அப்படி இப்படினா ஓகே..அப்படியே வா” காப்பி அடிக்குறது என்று பங்கமாக கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்