நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
3, வை ராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கியவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா. இவர் பல ஆண்டுகளுக்குப் பின் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இந்தியில் இயக்குநராக அறிமுகமாவுள்ளார். இதற்கிடையில் தமிழில் “லால் சலாம்” படத்தை இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர்.
மேலும் நிரோஷா, ஜீவிதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதேசமயம் யாரும் எதிர்பாராத விதமாக பல ஆண்டுகளுக்குப் பின் நடிகர் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரின் கேரக்டர் அறிமுகமும் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் மொத்த ஷூட்டிங்கும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முடிவடைந்தது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த தீபாவளியை முன்னிட்டு லால் சலாம் படத்தின் டீசர் வெளியானது. இதில் இந்து, இஸ்லாம் மக்கள் இடையே கிரிக்கெட் போட்டி மூலம் மோதல் ஏற்படுவதும், அதன் பின்னால் இருக்கும் அரசியல் பற்றியும் இப்படம் எடுத்துரைப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்ற தகவல் வெளியான நிலையில், அதனையெல்லாம் மறுத்த படக்குழு கண்டிப்பாக படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது. மேலும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஜினிகாந்த் தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசிய நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர் கபில்தேவ் டப்பிங் பேசும் புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட் கபில்தேவ் லால்சலாமிற்கு டப்பிங் பேசி முடித்தார்...என்ன ஒரு அனுபவம்” என தெரிவித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் லால் சலாம் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.