நெல்லை மத்திய மாவட்டம், திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டைச் சேர்ந்த மாநகர பிரதிநிதி ஆர். மணி (௭) சுண்ணாம்பு மணி ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள் என தலைமைக்கழக பொதுச்செயலாளர் துரை முருகன் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வஹாப்பிற்கும், மேயருக்குமிடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வந்த நிலையில் அப்துல் வஹாப்பின் ஆதரவு கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தனர். இதனால் ஏற்பட்ட மோதல் போக்கில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்பை பொறுப்பில் இருந்து நீக்கி தலைமை அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் அவருக்கு பதில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாளை தொகுதி எம்எல்ஏ வுமான டிபி எம் மைதீன்கானை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தது. அதன் பின்னரும் கவுன்சிலர்ககளை தூண்டிவிட்டு ஒவ்வொரு கூட்டங்களையும் நடத்தவிடாமல் பிரச்சினை செய்து வருவதாக ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். தொடர்ச்சியாக நெல்லை மாநகராட்சியில் மக்களின் பிரச்சினைகளுக்காக மன்ற கூட்டம் நடத்தாமல் தங்களுக்குள் பிரச்சினை செய்து கொள்வதுடன் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மனு கொடுப்பதற்காக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால் முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மனுவுடன் மாநகராட்சி அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் தானுமூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவரது அழைப்பை ஏற்று கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அதற்கு முந்தைய வார கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் மட்டும் 10 மணிக்கே கூட்டரங்கிற்கு வந்த நிலையில் பெரும்பான்மையான 40க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணிப்பு செய்து ஆணையாளர் அறை அருகே உள்ள சிறு கூட்ட அரங்கில் தங்களுக்குள் தனி கூட்டம் நடத்தினர். அதற்கும் முந்தைய கூட்டங்களிலும் கூட்டத்தை நடத்த விடாமல் வாக்குவாதம் செய்வது, மேயர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது என நெல்லை மாநகராட்சியில் இதுவரை ஒரு கூட்டத்தை கூட முறையாக நடத்தவிடாமல் கவுன்சிலர்கள் பிரச்சினையில் ஈடுபட்டு வந்தனர். இந்த விவகாரங்களை உண்ணிப்பாக கவனித்து வந்த தலைமைக்கழகம் இந்த விசயத்தில் அதிரடி முடிவெடுக்க முடிவு செய்தது. அதன்படி திமுக கவுன்சிலர்களை கண்காணிக்க ரகசிய குழு ஒன்றை அமைத்ததாகவும் தெரிகிறது. அதன் வெளிப்பாடாக 3 திமுக கவுன்சிலர்கள் மற்றும் கவுன்சிலர் ஒருவரின் கணவர் என 4 பேரை தற்காலிகமாக அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கி உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் இந்த உத்தரவையும் மதிக்காமல் திமுக கவுன்சிலர் ஒருவர் சமூக வலைத்தல பக்கத்தில் பதிவு ஒன்றையிட்டுள்ளார். அதில் தனது புகைப்படத்துடன் கட்சி அறிவிப்பு நோட்டீஸை சேர்த்து இந்த மாதிரி நேரங்களில் வீரர்கள் எல்லாம் அடிக்கடி சொல்வது என்ன தெரியுமா? ம்ம்ம் பார்த்துக்கலாம்... என தலைமைக்கழக அறிவிப்பை விமர்சித்து வைத்திருப்பது தலைமையின் அறிவிப்பையே அலட்சியப்படுத்தும் நோக்கில் கவுன்சிலர்கள் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.