சமீபத்தில் மறைந்த இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் வீட்டில் மீண்டும் ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


1965 ஆம் ஆண்டில் தனது இயக்குநர் பயணத்தை தொடங்கிய கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதை ஆத்ம கவுரவம் படம் பெற்றுக் கொடுத்தது. 


இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை கே.விஸ்வநாத் இயக்கியுள்ளார். மேலும் தனது படங்கள் மூலம், பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் எனப் பல விஷயங்களை பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகவும் அவர் திகழ்ந்தார்.  தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை  கமலை வைத்து இயக்கியுள்ளார். இயக்குனர் என்பதை தாண்டி குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா மற்றும் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். 


 இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ'விருதையும்  கே.விஸ்வநாத் பெற்றுள்ளார். இதனிடையே வயது மூப்பு காரணமாக கடந்த சில காலங்களாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


இந்நிலையில்  கே.விஸ்வநாத்தின் மனைவி ஜெயலட்சுமி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண்  உட்பட திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.விஸ்வநாத் இறந்த ஒரு மாதத்திலேயே மனைவி ஜெயலட்சுமியும் மரணமடைந்தது அவர்கள் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.