இயக்குநர் கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் வெற்றி விழாவில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படம் “முந்தானை முடிச்சு”. இந்த படத்தில் ஹீரோயினாக ஊர்வசி அறிமுகமாகியிருந்தார். மேலும் பூர்ணிமா ஜெயராம், தீபா, கே.கே.சௌந்தர், நளினிகாந்த், கோவை சரளா, பயில்வான் ரங்கநாதன், பேபி சுஜிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். கிட்டதட்ட வெள்ளி விழா கண்ட இப்படம் பாக்யராஜின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று. இன்றைக்கும் டிவியில் போட்டால் சேனலை மாற்ற மனமில்லாமல் முழு படத்தையும் பார்ப்பவர்கள் ஏராளம். 


இதனிடையே சமூக வலைத்தளத்தில் மறைந்த நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர், முந்தானை முடிச்சு படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று உரையாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “முந்தானை முடிச்சு என இந்த படத்துக்கு பெயர் வைத்த காரணத்தை விட, அரசியல் சர்ச்சையாக்கும் அளவுக்கு இந்த முந்தானைக்கு விளக்கம் கொடுத்து விட்டார்கள். இந்த முடிச்சு என்பது மக்களுக்கும் சினிமாவுக்கும் இடையே போடப்பட்ட முடிச்சு என்பதை குறிப்பிட வேண்டும். ஒரு முதலமைச்சராக இல்லாமல், சினிமாவில் இருக்கும் ஒருவராக நான் பேசுகிறேன். இந்த படத்தை நான் ஏவிஎம் சரவணனிடம் வீடியோ கேசட் வாங்கி வைத்து அடிக்கடி போட்டு பார்க்கிறேன். அது ஏன் என கேட்கக்கூடாது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு கருத்துகள் ஒளிந்திருக்கின்றது. 






ஒரு ஹீரோயின், ஹீரோவை அடைய மிகப்பெரிய பொய்யை சொல்வதற்கு கூட தயாராகும் வகையில் இந்த படத்தை அமைத்திருக்கிறார்கள். இதில் சொல்லப்பட்டிருக்கிற கருத்தின் துணிவு மிகப்பெரிய துணிச்சல் தான். இந்த படத்தை பெண்கள் தவறாக எடுத்துக்கொள்ளாத வகையில் சித்தரித்து இருப்பது பாக்யராஜின் தனித்திறமை தான் காரணம். அதற்காக எந்த கருத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது இல்லை. முந்தானை முடிச்சு படத்தை பொறுத்தமட்டில் நாம் கதையுடன் இணைந்து பயணிக்கின்றோம். அப்படிப்பட கதையை அமைப்பது சாமர்த்தியம். இதை இப்படி மக்களுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என சிந்திருப்பது பாக்யராஜ் வளர்ந்திருக்கிறார்” என தெரிவித்திருப்பார்.