பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற உள்ளது.
ரசிகர்களிடையே பிரபலமான மாரிமுத்து
தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் மாரிமுத்து. சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த அவர் கிடைக்கும் வேலைகளை செய்து 1980 ஆம் ஆண்டின் பிற்பகுதி காலக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து நடிகர் ராஜ்கிரண், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் மூலம் பல படங்களில் பணியாற்றிய மாரிமுத்து சிலம்பரசன் நடித்த மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியனார்.
அவர், நடிகர் பிரசன்னா நடித்த ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநரானார். தொடர்ந்து புலிவால் படத்தை இயக்கிய மாரிமுத்து, தொடக்கத்தில் இருந்தே சில படங்களில் நடிக்கவும் செய்திருந்தார். அவரை முழுநேர நடிகராக இயக்குநர் மிஷ்கின் யுத்தம் செய் படத்தில் நடிக்க வைத்தார். இதன்பின்னர் முழுநேர நடிகராக மாறிய மாரிமுத்து ரஜினி, கமல், விஜய், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார்.
எதிர்நீச்சல்:
ஆனால் மாரிமுத்துவை பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைய செய்தது என்னவோ சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியல் தான். இதில் ஆதி குணசேகரனாக எண்ட்ரீ கொடுத்த அவர், தான் இல்லை என்றால் அந்த சீரியலே இல்லை என்னும் அளவுக்கு மிரட்டியிருந்தார். கிட்டதட்ட 500 எபிசோட்களை கடந்த எதிர்நீச்சல் சீரியலுக்காக பல தரப்பட்ட ரசிகர்களை பெற்றார். அவர் பேசும் ஒவ்வொரு தக் லைஃப் வசனங்களும் சமூக வலைத்தளத்தில் பிரபலமானது.
மாரடைப்பால் மரணம்
சின்னத்திரை, வெள்ளித்திரை என பிஸியாக நடித்து வந்த மாரிமுத்து, நேற்று (செப்டம்பர் 8) ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து திடீரென தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் ஸ்டூடியோவில் இருந்து பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தானே கார் ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலக பிரபலங்கள், ரசிகர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைவரும் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் மாரிமுத்து உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள பசுமலைத்தேரி கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாரிமுத்து மறைவு செய்தியால் சொந்த ஊர் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சுற்றுவட்டார மக்கள் குவிந்து வருகின்றனர்.இன்று காலை 10.30 மணியளவில் மாரிமுத்து உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று அடக்கம் செய்யப்படும் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.